28. நீருண்டு பொழிகின்ற காருண்டு விளைகின்ற
நிலனுண்டு பலனுமுண்டு
நிதியுண்டு துதியுண்டு மதியுண்டு கதிகொண்ட
நெறியுண்டு நிலையு முண்டு
ஊருண்டு பேருண்டு மணியுண்டு பணியுண்டு
உடையுண்டு கொடையு முண்டு
உண்டுண்டு மகிழவே யுணவுண்டு சாந்தமுறும்
உளமுண்டு வளமு முண்டு
தேருண்டு கரியுண்டு பரியுண்டு மற்றுள்ள
செல்வங்கள் யாவுமுண்டு
தேனுண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்
தியான முண்டாயி னரசே
தாருண்ட சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை: உயரிய மாடி வீடுகள் நிறைந்த சென்னைக் கந்த கோட்டத்துட் கோயில் கொண்டிருக்கும் கந்த வேட் கடவுளே, தண்ணிய ஒளி பொருந்திய மணிகளுள் சைவமணியாகிய ஆறுமுகம் கொண்ட தெய்வ மணியே, தேனுண்டு வண்டினம் சூழும் கடம்பு மாலை யணியும் நின் திருவடிகளைத் தியானிக்கும் செயலுடையராயின், ஒருவர்க்குக் கடல் முதலிய நீர் நிலைகளில் உள்ள நீரை முகந்து பெய்யும் கார்முகிலின் தண்ணீரை யுண்டு விளைகின்ற நிலபுலங்களும் அவற்றால் எய்தும் பயனும் உண்டாம்; அதனால் நிதியுண்டாகும்; பலர் புகழும் சீர்த்தி யுண்டாகும்; நல்ல அறிவுண்டாகும்; உயர்கதி பெறுதற்குரிய நெறியும் அதனால் எய்தப்படும் நிலையும் உண்டாகும்; ஊரும் பேரும் உண்டாகும்; நவமணிகள் பதித்த பூணாரம் உண்டாகும்; உடுக்க உயர்ந்த உடையும் உண்டாகும்; இல்லார்க்குக் கொடுக்கும் ஈகைச் செய்கையும் வேளைதோறும் இனியனவுண்டு மகிழ்தற்கு மேலான உணவும் உண்டாகும்; உள்ளத்தில் சாந்தமும் ஞான வளமும் உண்டாகும்; ஊர்தியாய தேரும் யானையும் குதிரையும் மற்றுமுள்ள செல்வங்கள் அனைத்தும் உண்டாகும், எ. று.
தார், உயரிய மாடிகள் அமைந்த பெரிய வீட்டைக் குறிக்கும் சொல்லென்று முன்பே கூறினாம். நீர்நிலைகளில் உள்ள நீரைக் குடித்து மழை பொழிய வரும் மேகம் நிறம் கருமை யுறுதலின், அதனை “நீருண்டு பொழிகின்ற கார்” எனச் சிறப்பிக்கின்றார். கார் மேகம் பொழியும் மழைநீரால் விதைத்த ஒன்று ஆயிரமாக விளைவிக்கும் வளவயலை, “விளைகின்ற நிலன் உண்டு” எனவும், அதனால் உழவர் பெரும்பலன் ஏய்துவது தோன்றப் “பலனுண்டு” எனவும் கூறுகின்றார். விளைவு மிகவுடையார்க்குப் பொன்னும் பொருளுமாகிய நிதியும், அது கண்டு பலரும் புகழ்ந்துரைக்கும் மேன்மையுமுண்டாதலால் “நிதியுண்டு துதியுண்டு” என்றும், செல்வம் மிக்க வழிச் சிலர்க்கு மதி கெட்டொழிதல் காணப்படுதலால், “மதியுண்டு” என்றும், மதியுடையார்க்கு உயர்கதியும், அதனை யடைதற்குரிய நெறியும், நெறிக்கண் நிற்கும் வழி யெய்தும் சாலோக முதலிய பத முத்திகளும் வாய்த்தலால், “கதி கொண்ட நெறியுண்டு நிலையுமுண்டு” என்றும் உரைக்கின்றார். அம்மையிற் பெறலாகும் நலத்தினும் இம்மை வாழ்வை விரும்புவோர் மிகப் பலராதலின், அவர்கட்கு அது தானும் குறைவுறாது என்றற்கு, “ஊருண்டு பேருண்டு மணியுண்டு பணியுண்டு உடையுண்டு கொடையுமுண்டு” எனவும், “உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தமுறும் உளமுண்டு வளமு முண்டு” எனவும், “தேருண்டு கரியுண்டு பரியுண்டு மற்றுள்ள செல்வங்கள் பலவுமுண்டு” எனவும் விரித்துரைக்கின்றார். ஊரும் பேரும் யாவரும் விரும்புவன. மணியுண்டு பணியுண்டு என்பது, மணிகள் இழைத்த பூணாரத்தின் மேற்று. ஊர் பேர் முதலியன வுடையார்க்குப் புகழ் பயப்பது கொடை நலமாதலின் அதுவும் எய்தலாம் என்பது தோன்றக் “கொடையும் உண்டு” என்றும், கொடையும் கொடுக்கக் குறைபடாச் செல்வமு முடையராயினும் சலனமற்ற மனநிலையமைவது அரிதென்பது பற்றி, “சாந்தமுறும் உளமும் உண்டு” என்றும், சாந்த நிலையே எப்போதும் உளதாதற்கு ஞானம்இன்றி யமையாமையால், அதனை “வளமும்உண்டு” என்றும் குறிக்கின்றார். இம்மையில் அரச போகமே அவர் கண்ணதாம் என்பார், “தேருண்டு கரியுண்டு பரியுண்டு மற்றுள்ள செல்வங்கள் யாவும் உண்டு” எனக் கூறுகிறார். தியான முண்டாயின் எனக் காரணம் கூறலின், உண்டாம் என வரற்பாலதாகிய ஆக்கவினை செய்யுளாதலின் தொக்கது. கடம்புமாலையை விரும்புதல் பற்றித் திருநாவுக்கரசர், முருகனைக் “கடம்பமர் காளை” (தனி. நேரி) என்று குறிக்கின்றமை காண்க.
இதனால், முருகன் திருவடியைத் தியானிப்பவர்க்கு இம்மைச் செல்வமும் மறுமைப் போகமும் இனிதின் எய்துமாறு கூறியவாறாம். (28)
|