280.

    தணிகா சலம்போய்த் தழையேனோ
        சாமி திருத்தாள் விழையேனோ
    பணிகா தலித்துப் பிழையேனோ
        பாடி மனது குழையேனோ
    திணிகா ணுலகை யழையேனோ
        சேர்ந்தவ் வீட்டுள் நுழையேனோ
    பிணிகா ணுலகிற் பிறந்துழன்றே
        பேதுற் றலையும் பிழையேே்ன.

உரை:

     நோய் மிக்க இவ்வுலகிற் பிறந்து வருந்தி அறிவு மயங்கி யலமரும் குற்றத்தையுடைய யான், தணிகை மலைக்குச் சென்று மகிழ்ச்சியால் மனம் மலர மாட்டேனா; அங்கே முருகக் கடவுளின் திருவடிகளைக் கண்டு அவற்றை என் தலைமேற் கொள்ள ஆசைப்பட மாட்டேனோ; அப்பெருமானுக்குரிய தொண்டுகளை அன்புடன் செய்து உய்தி பெற மாட்டேனா; அவன் திருப்புகழ்களை வாயாரப் பாடி மனம் உருக மாட்டேனா; நிலை பேறுடைய முத்தி யுலகை யெண்ணி முருகனைக் கூவி யழைக்க மாட்டேனா; அதனை யடைந்து பேரின்ப வீட்டுட் புக மாட்டேனா, எ. று.

     நோயும் துன்பமும் நிறைந்தது நிலவுலக மாதலின் இதன்கட் பிறந்து அறிவு மயங்கி வருந்துவது குற்றமாதலால், வள்ளலார் தன்னைப் “பிணி கான் உலகிற் பிறந்துழன்றே பேதுற்றலையும் பிழையேன்” என்று பேசுகின்றார். மண்ணுலகில் மானிடப் பிறப்பு மயக்கமுடைய தென்பதை நம்பியாரூரர், “மையல் மானிடமாய் மயங்கும் வழி ஐயனே தடுத்தாண்டருள்” என வேண்டுவதாகச் சேக்கிழார் கூறுவது காண்க. பேதுறுதல் - மயங்குதல். தணிகை மலை முருகப்பெருமான் கோயில் கொண்டிருப்பதாதலால், காணும் உள்ளத்துக்கு மகிழ்ச்சியும் மலர்ச்சியும் அளிப்பதை விதந்து, “தணிகாசலம் போய்த் தழையேனோ” எனவும், அங்கே அப்பெருமான் திருவடியை முடிமேற் சூடிக் கொள்ள வுண்டாகும் அன்பு திருவடி ஞானமாதலால், “சாமி திருத்தாள்விழையேனோ” எனவும் இயம்புகின்றார். அவ்விடத்தே தொண்டர் கூட்டமிருந்து திருப்பணி செய்வதும், திருப்புகழ்களை உள்ளன்புடன் அவர்கள் மனமுருகிப் பாடுவதும் காண்கின்ற வடலூர் வள்ளல் தாமும் அவற்றைச் செய்ய விழைகின்றமை தோன்றப் “பணி காதலித்துப் பிழையேனோ, பாடி மனது குழையேனோ” என வுரைக்கின்றார். பிழைத்தல், ஈண்டு உய்தல் மேற்று. குழைதல் - உருகுதல் . மேலும் கீழுமாகிய வுலகுகள் நிலையின்றி யழிவனவாதலால், நிலைத்த வீட்டுலகைத் “திணிகாண் உலகு” எனச் சிறப்பிக்கின்றார். திணி, திண்மை யடியாகத் தோன்றி நிலையுடைமை குறித்தது, அதனை நல்கும் பெருமானாதலால், அது கருதி அவனைக் கூவி யழைப்பது நெறியாதலால், “திணி காண் உலகை அழையேனோ” என்கின்றார். ஐயுருபு, பொருட்டுப் பொருளதாகிய குவ்வுருபின் மயக்கம். முத்தி நிலையத்தைச் சிவ லோக மெனவும் சிவநகர் எனவும் பெரியோர் கூறுவ துண்மையால், முத்தி யுலகை யடைவதும், முத்தி வீட்டிற் புகுவதும் விளங்கத் “திணி காண் உலகை யழையேனோ சேர்ந்தவ் வீட்டுள் நுழையேனோ” என விளம்புகின்றார்.

     இதனால், தணிகை மலைக்குச் செல்வோர் முத்தி யின்ப வீட்டுள் நுழையும் விழைவு கொள்வர் என்பது உணர்த்தியவாறாம்.

     (9)