284.

    மணியே கலாப மலைமேல் அமர்ந்த
        மதியே நினைச்சொல் மலரால்
    அணியேன் நல்லன்பும் அமையேன் மனத்தின்
        அடியார் அடிக்கண் மகிழ்வாய்ப்
    பணியேன் நினைந்து பதையேன் இருந்து
        பருகேன் உவந்த படியே
    எணியே நினைக்கில் அவமாம்இவ் வேழை
        எதுபற்றி உய்வ தரசே.

உரை:

     மணியே, தணிகை மலைமேல் எழுந்தருளும் முழு மதியே, அருளரசே, நின்னைச் சொற்களாகிய பூமாலை புனைந்து நான் அணி செய்ததில்லை; தூய அன்பும் உன்பால் நான் கொண்டதில்லை; உன்னுடைய அடியவர்களின் திருவடியில் மகிழ்ச்சியுடன் மனத்தாலும் பணிந்ததில்லை; உன் திருவருளை யெண்ணி அதனைப் பெறல் வேண்டுமெனப் பதைத்ததில்லை; சிந்தித்திருந்து அவ்வழிப் பெறலாகும் இன்பத் தேனை விருப்புடன் உண்டதில்லை; இவற்றை இப்போது நினைக்குங்கால் காலம் வீணாகிறது; இனி ஏழையாகிய யான் எதனைத் துணையாகக் கொண்டு உய்தி பெறுவேன்? எ. று.

     அரசே யெனப் பொதுப்பட மொழிவதால் சிறப்புடைய அருளரசாதல் பெறப்படுகிறது. செந்நிறம் கொண்ட மாணிக்கமணி போல்வதால், “மணியே” என்கின்றார். தோகை யொடு தோன்று மயில் போலும் உருவ முறுதலால், தணிகை மலையைக் “கலாப மலை” யெனவும், மயில்மேல் அமர்ந்து தோன்றும் காட்சி, மலை யுச்சியில் கலையெலாம் நிறைந்து விளங்கும் முழுமதி போல்வதால், “மலை மேலமர்ந்த மதியே” எனவும் இசைக்கின்றார். அந்த இனிய காட்சி, வடலூர் வள்ளலைத் தமது ஏழைமையை நினைக்கப் பண்ணவே, அதனால் முருகனது அருட்பேற்றுக் குரியவற்றைச் செய்யா தொழிந்த குறைகளை யெண்ணுகின்றார். தன்னிடம் சொன்மாலை தொடுக்கும் தகுதி யிருப்பவும் அதனைச் செய்யாத தவறு மனத்தின்கண் எழக் கண்டு, “நினைச் சொன் மலரால் அணியேன்” என வுரைக்கின்றார். சொற்களால் பாட்டுக்கள் புனைந்து பாடுவது சொன்மலரால் அணிதலாம். பூமாலை போல் வாடாமை சொன்மாலைக்கு இயல்பாதலால், அது முதற்கண் நிற்கிறது. உள்ளத்தில் உண்மையன்பில்லாத போது உருவாகாதாதலால், “நல்லன்பு அமையேன்” எனக் கூறுகின்றார். நல்லன்பு - உண்மையான தூய அன்பு. “துருத்தியாய் திருந்தடி உளம் குளிர்ந்த போதெலாம் உவந்துவந் துரைப்பனே” (துருத்தி) என்று ஞானசம்பந்தர் பாடுவது காண்க. முருகன்பால் மெய்யன்புடையார் அவனுடைய அடியாரையும் முருகப் பெருமானாக நினைந்து வணங்கி வழிபடுவர்; யான் அது செய்யா தொழிந்தேன் என வருந்துவாராய், “மனத்தின் அடியார் அடிக்கண் மகிழ்வாய்ப் பணியேன்” என விளம்புகின்றார். அடிக்கண் மனத்தின் மகிழ்வாய்ப் பணியேன் என இயையும். மனத்தின் என்றவிடத்துச் சிறப்பும்மை தொக்கது. செய்த குற்றத்தை நினைவு கூருமிடத்துச் சிந்தை துடிப்பது ஒருபாலாக, அதனால் திருவடிப் பேற்றுக்குரிய தகுதியை இழப்பது தோன்றி வருத்துதலால் உடம்பெங்கும் பதற்ற மெய்வது தோன்ற, “நினைந்து பதையேன்” எனவும், திருவருளை நினைக்கும் நெஞ்சில், நினைக்குந் தோறும் “அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்” (திருவாசகம், கோத்தும்பி) சொரியப் பெற்று மகிழ்ச்சி மிகுந்து உண்பது இழந்தேன் என்று புலம்புவாராய், “இருந்து பருகேன் உவந்த படியே” எனவும், இனி நினைக்கின்ற போது வருத்தம் மீதூர்வதோடு காலமும் வீண் போவது தெரிவதால், “எணியே நினைக்கில் அவமாம்” எனவும் நினைந்து இரங்குகின்றார்; சொன்மாலை யணிதல் முதலியன சரியையும் கிரியையும் யோகமுமாகிய தவமாதலால், தவமில்லார்க்குத் திருவருள் ஞான முண்டாகா தென்னும் உண்மை நூலுணர்வு மனத்தின்கண் தோன்ற அறியவரும் வடலூர் வள்ளல், “இவ் வேழை எது பற்றி உய்வது” எனக் கையறவு படுகின்றார். படி - வடித்த தேன். “தேன் படிக்கும் அமுதாம்” என வள்ளற் பெருமான் பிறிதோரிடத்தில் உரைப்பது அறிக.

     இதனால், அருள் ஞானப் பேற்றுக்குரிய தவச் செயல்களைச் செய்யா தொழிந்த ஏழைமை நினைந்து இரங்கியவாறு பெற்றாம்.

     (3)