285. உய்வண்ண மின்றி யுலகா தரத்தில்
உழல்கின்ற மாயா மடவார்
பொய்வண்ண மொன்றின் மனமாழ்கி யன்மை
புரிதந்து நின்ற புலையன்
மெய்வண்ண மொன்று தணிகா சலத்து
மிளிர்கின்ற தேவ விறல்வேல்
கைவண்ண முன்ற னருள்வண்ண மான
கழல்வண்ணம் நண்ண லுளதோ.
உரை: மெய்ம்மையின் தன்மை யுடைய தணிகை மலையில் விளங்குகின்ற தேவனே, வெற்றி தரும் வேற்படையை யேந்தி யருளும் கைவண்ணனே, நன்னெறி பற்றி உய்திபெறும் அறிவின்றி உலகியல் ஆசையுற்று வருந்தும் பொய்ப் பெண்டிரின் பொய் வாழ்விற் கலந்து மனம் மயங்கி அறமல்லது புரிந்தொழுகும் புலையனான யான், உனது அருள் வடிவான திருவடியை அடையும் திறம் உண்டா? எ. று.
மெய்ம்மை யென்றும் சலியாத நிலைபேறுடையதாகலின், அதுபோல் நிலைத்த தன்மையுடையது தணிகை மலை யென்பாராய், “மெய்வண்ணமொன்று தணிகாசலம்” எனவும், அருளொளி பரவும் பெருமானாதல் விளங்க, “மிளிர்கின்ற தேவ” எனவும் புகழ்கின்றார். மிளிர்தல் - ஒளி செய்தல். விறல் - வெற்றி. பகையிருளைப் போக்கி இன்பமருளும் இயல்பு தோன்ற, “விறல் வேல் கைவண்ண” எனக் கூறுகின்றார். அருள் நெறி பற்றி அழியா இன்ப வாழ்வை நினையாமல் உலகியற் குரிய பொருளாசை கொண்டு பலரைக் கூடித் திரியும் பொருட் பெண்டிரை, “உய் வண்ணமின்றி உலகாதரத்தில் உழல்கின்ற மாய மடவார்” என்று விளம்புகின்றார். குலம் பெருகக் குடி பெருக அருளறம் பெருக மனைக்கண் கற்பின் பொற்புற வாழும் நல்லற மகளிரை விலக்குதற்கு, “மாய மடவார்” என்று கூறுவது நோக்கத் தக்கது. உலகியல் வாழ்வு பொருள் மேல் நிற்பதால், அதனைப் பெறும் வழி வகைகளையே நினைந்து பொருளுடையாரையே நாடுவது பற்றி, “உய்வண்ண மின்றி யுலகாதரத்தில் உழல்கின்ற மடவார்” என்று இயம்புகின்றார். உலகியற் பொன் மேலும் பொருள் மேலும் உளதாகும் பேராசை, “உலகாதரம்” எனப்படுகிறது. ஆதாரம் ஈண்டுப் பேராசை குறித்து நின்றது. நல்லற மகளிராய் அன்பும் அருளும் கொண்டு மெய்ந்நெறி மேற்கொண்டு வாழ்தல் “உய்வண்ணம்”; அது பேரின்பப் பேற்றுக்கு ஏதுவென அறிக. பொய் புனைந்துரைப்பதே மாய மகளிரின் இயல்பாதலால், அவரது பொய்ம்மை மயக்குக்கு இரையாகி அறிவு திரிந்து அறமல்லாதவற்றைச் செய்து கீழ்மை யுறுவது உணர்த்துதற்குப் “பொய்வண்ண மொன்றின் மனம் மாழ்கி அன்மை புரிதந்து நின்ற புலையேன்” என இழிந்துரைக்கின்றார். புலால் என்பதன் அடியாக வரும் புலை யென்னும் சொல்வழி வந்தது, “புலையன்” என்பது. புலால் உண்போரைப் புலையர் என்று இகழ்வதும் கீழ்மக்கள் எனக் கருதுவதும் வழக்கில் உளவாயினமையின், கீழ்மகன் என இழித்தற்குப் “புலையனேன்” எனப் புகல்கின்றார். ‘பொல்லாப் புலாலை நுகரும் புலையர்’ (திருமந். 199) என்று திருமூலர் உரைப்பது காண்க. அருள் நெறி வேண்டுவார்க்குப் பொருட் பெண்டிர் தொடர்பு மாறாதலால், “உன்றன் அருள் வண்ணமான கழல் வண்ணம் நண்ணல் உளதோ” என மொழிகின்றார். “பொருட் பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவினவர்” (குறள்) எனத் திருவள்ளுவர் தெரிவிப்பது காண்க.
இதனால் பொருட் பெண்டிரைக் கூடித் திரியும் மக்கள் அருட் பொருளான ஆண்டவன் திருவடியை அடையார் என அறிவுறுத்தவாறாம். (4)
|