286. நண்ணாத வஞ்ச ரிடம்நாடி நெஞ்சம்
நனிநொந்து நைந்து நவையாம்
புண்ணாகி நின்ற எளியேனை அஞ்சல்
புரியாது நம்பொன் னடியை
எண்ணாத பாவி யிவனென்று தள்ளின்
என்செய்வ துய்வ தறியேன்
தண்ணார் பொழிற்கண் மதிவந் துலாவு
தணிகா சலத்தி றைவனே.
உரை: குளிர்ந்த சோலையின்கண் சந்திரன் தவழ்கின்ற தணிகை மலையில் எழுந்தருளும் இறைவனாகிய முருகப் பெருமானே, ஒருவரும் சேராத வஞ்ச நெஞ்சம் உடையவர்களிடம் உதவி வேண்டிச் சென்று மனம் மிகவும் நொந்து ஏமாற்றமாகிய புண்பட்டு வருந்துகின்ற எளியவனாகிய எனக்கு அஞ்சாதே என்று அருள் செய்யாமல், நமது பொன்னடியை நினையாத பாவியாகும் இவன் என்று திருவுள்ளத்து வெறுப்புற்றுப் புறத்தே தள்ளி விட்டால், யான் செய்வது யாது? வேறு உய்தி பெறும் வழி அறிகிலேன், எ. று.
வானளாவ உயர்ந்த மரங்கள் நிற்கும் சோலைகள் என்பது தோன்றத் “தண்ணார் பொழிற்கண் மதிவந் துலாவு தணிகாசலம்” என்றும், மதி மண்டலம் வரை மரங்கள் உயர்ந்திருக்கின்றமை புலப்பட, “மதி வந்துலாவும்” என்றும் புனைந்துரைக்கின்றார். அன்பின்றி வஞ்சமே நிறைந்த நெஞ்சுடமையால் யாவரும் நெருங்காத நிலையினர் என்றற்கு, “நண்ணாத வஞ்சர்” எனக் குறிக்கின்றார். நெஞ்சத்து வஞ்சமுடைமை புறத்தே தெரியாமையால் அவர்பால் உதவி வேண்டிச் சென்று அவரது வஞ்சம் கண்டு ஏமுற்று நெஞ்சு புண்ணுறுவதை, “வஞ்சரிடம் நாடி நெஞ்சம் நனி நொந்து நைந்து நவையாம் புண்ணாகி நின்ற எளியேன்” என்று கூறுகின்றார். ஒருவரது வஞ்சம் தெரிந்தவுடன் நெஞ்சில் ஏமாற்றமும் வருத்தமும் பன்முறையும் தோன்றி மெலிவித்தலால், “நெஞ்சம் நனி நொந்து நைந்து புண்ணாயிற்று” என்று முறையிடுகின்றார். நெஞ்சு மெலிந்து புண்ணாகிய வழி ஏற்றமுடைய செயல்களைச் செய்ய எண்ணம் எழாதாகையால், “ நவையாம் புண்ணாகி” என்று புகல்கின்றார். இவ்வாற்றல் எளியனாய் உன் திருவடியை நினைந்து வழிபடாது ஒழிந்தேனாதலால் என்னை அது செய்யாது, “பாவியாயினவன்” என்று என்மேல் வெறுப்புக் கொண்டு புறக்கணித்தலாகாது என்பாராய், “அஞ்சல் புரியாது நம் பொன்னடியை எண்ணாத பாவி இவன் என்று தள்ளின்” என்று கூறுகின்றார். ஏழைமையால் குற்றம் புரிபவரை அருளறிவு தந்து புகழ் அளிப்பார், அது புரியாவிட்டால் ஏழைகட்கு உய்தி வேறில்லை என்பது பற்றி, “என்செய்வ துய்வ தறியேன்” என உரைக்கின்றார். “பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தாயன்றே, இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திருக்கருணை யிருந்தவாறே” (தாண்ட. தனி) என்று திருநாவுக்கரசர் செப்புவது காண்க.
இதனால் வஞ்சரது வஞ்சத்தால் நெஞ்சு புண்ணுற்று இறைவனை வழிபடாது நின்ற குற்றத்தால் தன்னைப் புறக்கணித்தலாகாது எனப் புகன்றவாறாம். (5)
|