287. இறையேனும் உன்றன் அடியெண்ணி அங்கி
இழுதென்ன நெஞ்சம் இளகேன்
மறையோதும் உன்றன் அருள்பெற்ற தொண்டர்
வழிபட் டலங்கல் அணியேன்
குறையோடும் இங்கு மயல்கொண்டு நின்ற
கொடியேனை யாள லுளதோ
நிறையோர் வணங்கு தணிகா சலத்தில்
நிலைபெற் றிருக்கு மவனே.
உரை: நிறையுடைய பெருமக்கள் வழிபடுகின்ற தணிகை மலையில் நிலையாய் எழுந்தருளும் பெருமானே, உனது திருவடியை நினைந்து நெருப்பில் பட்ட வெண்ணெய் போல மனம் உருகுவதில்லேன்; மறை நூல்களில் சிறப்பாக உரைக்கப்படும் உன்னுடைய திருவருள் ஞானம் பெற்ற தொண்டர்கள் மேற்கொண்ட வழி நின்று மாலைகள் தொடுத்து உன்னை அழகு செய்வதில்லேன்; இத்தனைக் குற்றங்களோடு மனத்தின்கண் மயக்கம் கொண்டு இருக்கின்ற கொடியவனாகிய என்னை அருளாலாண்டு கொள்ளத் திருவுள்ளம் உளதோ? எ. று.
நற்குணங்களால் நிரம்பிய பெருமக்களை, “நிறையோர்” என்றும், அவர்களால் நாளும் வணங்கி வழிபடப்படும் சிறப்புடைமை பற்றி, “நிறையோர் வணங்கு தணிகாசலம்” என்றும், அங்கே நிலையாய் எழுந்தருளும் பெருமை விளங்க, “நிலை பெற்றிருக்கு மவன்” என்றும் இசைக்கின்றார். முருகப் பெருமான் திருவடியை அன்புடன் சிந்திக்குமிடத்து மனம் அனலிற் பட்ட வெண்ணெய் போல உருகுவதாக அத்தகைய மனநிலை தன்னிடம் சிறிதளவும் இல்லாமை வெளிப்படுத்தற்கு, “இறையேனும் உன்றனடி எண்ணி அங்கி இழுதென்ன நெஞ்சம் இளகேன்” என்று மொழிகின்றார். இறை - சிறிது. அங்கி - நெருப்பு. இழுது - வெண்ணெய்த் திரள். இளகுதல் - உருகுதல். மறை, ஈண்டு சிவாகமங்களின் மேல் நின்றது. அவை விதி வாய்பாட்டிலும், மறை வாய்பாட்டிலும் இயன்றிருப்பதால் மறை எனப்படுகின்றன. சரியை, கிரயை, யோகம், ஞானம் என நால்வகையாக அமைந்திருப்பது பற்றிப் பெரியோர்களால் நான்மறை எனவும் உரைக்கப்படுகின்றது. இவை வேறு நால்வேதம் வேறு. சிவாகமங்கள் திருவருட் பேற்றையே வற்புறுத்தலால் அருளாளும் தொண்டர்களை, “மறை யோதும் உன்றன் அருள் பெற்ற தொண்டர்” எனவும், அவர்கள் சொல்மாலையும் பூமாலையும் தொடுத்தணிந்து மகிழ்பவராதலின், “மறை யோதும் உன்றன் அருள்பெற்ற தொண்டர் வழிபட்டு அலங்கல் அணியேன்” எனவும் புகழ்கின்றார். வழிபடுவது, ஈண்டு வழி நின்று ஒழுகுவது என்னும் பொருளதாம். தொண்டர் என்பதன் ஈற்றில் ஒப்புப் பொருட்டாகிய இன்னுருபு தொக்கதாகக் கொண்டு தொண்டர் போல வழிபட்டு, “அலங்கல் அணியேன்” எனக் கொள்ளினும் பொருந்தும். அப்பொருட்குத் தொண்டர் என்றது திருஞானசம்பதர் முதலிய பெருமக்களை என்க. குணஞ்செயல்களில் உண்டாகும் குறைபாடுகளாலும், உடம்பின் வழி நிற்கும் மனத்தின்கண் உளதாகும் மயக்கத்தாலும் நேர்மையின் நீங்கிய குற்றங்கள் செய்யப்படுகின்றன வாகையால், “குறை யோடும் இங்கு மயல் கொண்டு நின்ற கொடியேன்” என்றும், நினைவு சொற் செயல்களில் கொடுமையுடையோர் திருவருட்பேற்றுக்கு உரியராகார் என்பதுபற்றிக், “கொடியேனை ஆளல் உளதோ” என்றும் இரங்குகின்றார்.
இதனால் திருவருள் பேற்றுக்கு உரிமை நல்காத செயல்களைச் செய்தமை நினைந்து வருந்தியவாறாம். (6)
|