288. அவம்நாள் கழிக்க அறிவே னலாதுன்
அடிபேணி நிற்க அறியேன்
தவம்நாடும் அன்ப ரொடுசேர வந்து
தணிகா சலத்தை அடையேன்
எவன்நான் எனக்கும் அவண்நீ இருக்கும்
இடம்ஈயில் உன்றன் அடியார்
இவன்ஆர் இவன்றன் இயல்பென்ன என்னில்
எவன்என் றுரைப்பை யெனையே.
உரை: பெருமானே, நாட்களை வீணே போக்குதற்குத் தெரியுமே யன்றி நின்னுடைய திருவடிக்கண் அன்பு செய்யும் வகையை அறியேன்; தவம் புரியும் நின்னுடைய அன்பர்களோடு கூடிக் கொண்டு தணிகை மலைக்கு வருவதில்லை; நான் எத்தன்மை யுடையவன்; எனக்கும் அவ்விடத்தில் எழுந்தருளி யிருக்கும் நிலையில் இருக்க இடமருளுவையாயின், உன்னுடைய அடியார்களை பார்த்து இவன் யார்; இவன் தன்மை யாது, என்று கேட்பாராயின், எத்தன்மையன் என என்னைப்பற்றி யுரைப்பாய்? எ. று.
அறிவறியாது செய்த செயல்களை நினைந்து வருந்துகின்ற வடலூர் வள்ளலார், தமது அறிவனைத்தும் வீண் பொழுது போக்குவதிலே சென்றதும் இறைவனை உணர்ந்து அன்பு செய்யா தொழிந்ததும் நினைக்கின்றாராதலால், “அவம்நாள் கழிக்க அறிவே னலாதுன் அடிபேணி நிற்க அறியேன்” என்றும், தனக்கறிவு இல்லையேனும் அன்பரோடு கூடித் தணிகைக்கு வந்து பயின்று இருக்கலாம்; அது தானும் செய்திலேன் என்பாராய்த் “தவம்நாடும் அன்பரொடு சேர வந்து தணிகாசலத்தை அடையேன்” என்றும் உரைக்கின்றார். தவம் - கோயிற்குச் செல்லுதல், அன்புடன் வழிபாடு செய்தல், இறைவனை மனத்தின்கண் நினைத்தல் முதலியன. இவை சரியை கிரியை எனச் சைவநூல்கள் கூறுகின்றன. தம்முடைய குணஞ் செயல்களின் சிறுமையை நினைந்து பொறுத்தருளி எனக்கும் திருமுன்பிருந்து தொண்டு செய்தற்கு ஓரிடம் தருகுவையாயின் அங்குள்ள தொண்டர்கள் என்னைக்கண்டு அருவருத்து ‘இவன் யாவனாகும்; இவன் குணஞ் செயல்கள் யாவை’ என்று உன்னையே வினவுவாரென்று இரங்குவாராய், “எவன்நான் எனக்கும் அவணீ யிருக்குமிடம் ஈயில் உன்றன் அடியார் இவன்ஆர் இவன்றன் இயல்பு என்ன என்னில்” என்றும், உண்மையை உரைப்பாயேல் அவர்கள் என்னை இகழ்ந்து புறம் போக விலக்குவரே என்பாராய், “எவன் என்றுரைப்பை எனையே” என்றும் மொழிகின்றார்.
இதனால் என் ஏழைமை கண்டு நீ மனமிரங்கி அருளினும் நின் அடியார் உடன் சேரக் கொள்ளார் என அஞ்சி வருந்தியவாறாம். (7)
|