289.

    எனையான் அறிந்துன் அடிசேர உன்னை
        இறையேனும் நெஞ்சி னிதமாய்
    நினையேன் அயர்ந்து நிலையற்ற தேகம்
        நிசம்என் றுழன்று துயர்வேன்
    தனையேன் நின்அன்பன் எனவோதி லியாவர்
        தகும்என் றுரைப்பர் அரசே
    வனையேர் கொளுஞ்செய் தணிகா சலத்து
        மகிழ்வோ டமர்ந்த அமுதே.

உரை:

     ஒப்பனையால் செய்தது போல உழவு செய்யப்படும் வயல்களையுடைய தணிகைப் பதியில் மகிழ்வோடு எழுந்தருளும் அமுதே, அருளரசே. என்னை யுணர்ந்து என்னை யுடையவன் நீ என்பதை அறிந்து உன்னுடைய திருவடியைச் சேர்தற்குச் சிறிதும் மனத்தில் அன்புடன் நினைந்திலேன்; அறிவயர்ந்து நிலையில்லாத என் உடம்பை நிலையுடையது என்று நினைந்து தீ நெறியில் சென்றலைந்து துன்புறுகின்றேன்; இத்தகைய என்னை நினக்கு அன்புடையவன் என்று சொல்வதாயின் எவர்தாம் அது தகும் என்று இசைவார்கள், எ. று.

     தன்னை உணர்பவன், தன்னையுடையவன் இறைவன் என்பதை உணர்ந்து அவன் திருவடியைச் சேர விழைகுவன் என்பதனால், “எனையான் அறிந்துன் அடிசேர” என்றும், அவ்விழைவுக் கேற்ப இறைவன் திருவடியை நாள்தோறும் நினைவது கடனாகவும், யான் உன்னை நினையா தொழிந்தேன் என்பார், “உன்னை இறையேனும் நெஞ்சில் இதமாய் நினையேன்” என்றும் உரைக்கின்றார். இறை - சிறிது. இதம் - அன்பு. நித்தம் என்பதன் திரிபாக நிதம் எனக் கொண்டு நிலையாய் என்று பொருளுரைப்பினும் அமையும். தன்னையறிந்தவர் தம்மையுடைய தலைவனை அறிவர் என்பதைத் “தம்மையுணர்ந்து தமையுடைய தன் உணர்வார்” என்று சிவஞான போதம் கூறுவது காண்க. தலைவன் உண்மை உணர்ந்தவர் தமது நிலையாமையை யுணர்ந்து நிலைத்த தன்மையுடைய இறைவனது அருள் வாழ்வு உணர்ந்து கொள்வர் என ஞானநூல்கள் விளங்கத் தெரிவிக்கவும், யான் அதனை மறந்து நிலையாவுடல் வாழ்வை நிலையென்று மாறுபடக் கருதித் துன்புற்று வருந்துகின்றேன் என்பார், “அயர்ந்து நிலையற்ற தேகம் நிசமென்று உழன்று துயர்வேன்” என்று சொல்லுகின்றார். அயர்தல் - மறத்தல். நிசம் - உண்மை . துயர்தல் - துயரப்படுதல். இந்நிலையில் யான் நின்னை வழிபடக் காண்போர் சிலர் இவன் முருகப் பெருமானுக்கு அன்புடைய தொண்டன் என்று சொல்வாராயின் அறிவுடைய பலரும் அவ்வாறு உரைப்பது பொருந்து மென்று ஏற்கமாட்டார்கள் என்பர், “தனையே நின் அன்பன் எனவோதில் யாவர் தகும் என்று உரைப்பர்” என்று இசைக்கின்றார். துயர்வேன் தனை என்பது எதுகை நோக்கிப் பிரிந்து நின்றது. ஓதில் எனவே ஓதமாட்டார்கள் என்பது கருத்தாம்.

     இதனால் தன்னுடைய வழிபாடு கண்டு என்னை உனக்கு அன்பன் என்று யாரேனும் சொன்னால் அதனை உலகவர் கொள்ளார் என வருந்தியவாறாம்.

     (8)