290.

    முதுவோர் வணங்கு தணிகா சலத்து
        முதலேயிவ் வேழை முறியேன்
    மதுவால் மயங்கும் அளிபோல் மயங்கி
        மதியாது நின்ற பிழையால்
    விதுவாகி அன்பர் உளம்மேவும் நீகை
        விடிலேழை எங்கு மெலிவேன்
    இதுநீதி யல்ல என்உன் றனக்கும்
        எவர்சொல்ல வல்லர் அரசே.

உரை:

     அருளரசே, அறிவால் முதிர்ந்த பெரியோர்கள் வணங்கி வழிபடுகின்ற தணிகை மலையில் எழுந்தருளுகின்ற முதல்வனே, ஏழைமையால் கெடுவேனாகிய யான் கள்ளுண்டு மயங்கும் வண்டு போல அறிவு மயங்கி உன்னை நினையா தொழிந்த குற்றம் பற்றிச் சந்திரன் போல் அன்பர்களின் உள்ளத்தில் தோன்றி ஒளிர்பவனாகிய நீ என்னைக் கைவிடுவாயாயின் ஏழையாகிய யான் எங்கே சென்று துன்புற்று மனம் மெலிந்து வருந்துவேன்; இது முறையாகாது என உனக்குச் சொல்லக் கூடியவர் யாவர்? எ. று.

      முதுவோர் - முதுமையுற்ற பெரியவர், முதுமை, ஈண்டு அறிவால் முதிர்தல் மேற்று. முதல்வனை முதல் என்கின்றார். “அடியேன் தன்னைத் தாங்குநர் இல்லை யென் வாழ் முதலே” (நீத்தல்) என மணிவாசகர் வழங்குவது காண்க. முறிதல் - கெடுதல். மது - தேன். மலரின் தேனை மது வென்றலும் மரபு. “மதுமலர் நற்கொன்றையான்” (தொண்டத்) என நம்பியாரூரர் ஓதுவது காண்க. அளி - வண்டு. உலகியற் சிற்றின்பத்தால் அறிவு மயங்கினமை புலப்பட, “மயங்கி” என்றும், அதனால் முருகப் பெருமான் திருவருளை நினையாது நின்றது குற்றமென உணர்ந்துரைத்தலின், “மயங்கி மதியாது நின்ற பிழையால்” என்று உரைக்கின்றார். விது - சந்திரன். அன்பர் உள்ளத்தில் குளிர்ந்த அமுத சந்திரன் போல் தோன்றி அருளொளி செய்தலின், “விதுவாகி அன்பர் உளம்மேவும் நீ” என்று சிறப்பிக்கின்றார். நீ கை விடுவாயாயின் ஏற்று ஆதரித்தருளுவார் எங்கும் எவரும் இல்லாமையால் அலமந்து கெடுவேன் என்பாராய், “நீ கைவிடில் ஏழை எங்கு மெலிவேன்” என்றும், அருளாளனாகிய உனக்கு நீ கை விடுவது முறையாகாது என எடுத்துரைக்க வல்லவர் எங்கும் எவரும் இல்லை என்பார், “இது நீதி அல்ல என உன்றனக்கும் எவர் செல்ல வல்லர் அரசே” என்றும் வருந்துகிறார்.

     இதனால் என் பிழை கண்டு நீ வெறுப்புற்று என்னைக் கை விடுவாயாயின் முறையாகாது என உனக்குச் செல்ல வல்லவர் ஒருவருமில்லை என முறையிட்டவாறாம்.

     (9)