292.

    திரப்படுவேன் மையல்புரி மாய வாழ்வில்
        தியங்குவேன் சிறிதேனும் தெளிவொன் றில்லேன்
    மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே
        மங்கையர்தம் கண்கள்எனும் வலைக்குள் வீழ்வேன்
    கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன்
        கண்ணனையாய் நின்றணிகை மலையைக் காணேன்
    இரப்பவர்க்கோர் அணுவளவும் ஈயேன் பேயேன்
        ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.

உரை:

     கண் போன்றவனே, மயக்கத்தைத் தருகின்ற மாய வுலக வாழ்வில் நிலையாய் நிற்பவனாய் அறிவு கலங்குவதன்றிச் சிறிதும் தெளிவு இல்லாமல் மரமாகி விட்டேன்; தீயவருடன் வீணாகத் திரிவேன்; மாய மகளிருடைய கட்பார்வையாகிய வலைக்குள் சிக்கிக் கொள்கிறேன்; இயல்வதை இல்லையென மறைப்பவர்க் கெல்லாம் முன்னாக நிற்கின்றேன்; இரக்க மில்லாதவன்; கண்ணிருந்தும் நின்னுடைய தணிகை மலையைக் காணுதல் செய்யேன்; இல்லையென இரக்கின்றவர்க்கு ஒரு அணுவளவேனும் ஈய மாட்டேன்; பேய்த்தன்மையுடைய யான் ஏன் பிறந்தேனோ? அறியேன், நிலத்துக்குச் சுமையாய் இருக்கின்றேன், எ. று.

     மாயா காரியமாதலால் உலக வாழ்க்கைக்கு வாழ்வாரை மயக்கும் தன்மை இயல்பாகலின், “மையல் புரி மாய வாழ்வு” என்றும், நன்னெறிக்கண் வாழாதார் இம்மாய வுலகில் பிறந்திறந்து உழலுவதை நிலையாகக் கொள்வராதலின், “திரப்படுவேன்” என்றும், இவ்வாழ்வில் அமைந்த காமவெகுளி மயக்கங்களால் அறிவு கலங்குவதும், தெளிவின்றி வருந்துவதும் இயற்கையாதலால், “தியங்குவேன் சிறிதேனும் தெளி வொன்றில்லேன்” என்றும், இவ்வகையால் உணர்ச்சி யில்லா தொழிவது பற்றி, “மரப்படுவேன்” என்றும் இயம்புகின்றார். திரப்படுதல் - நிலையாய் நிற்றல். அருட் சத்தியால் மாயையிலிருந்து இவ்வுலகு ஆக்கப்படுவது பற்றி உலக வாழ்வு மாய வாழ்வு எனப்படுகிறது. உணர்ச்சியின்றி இருத்தல் மரத்தல் என்று சொல்வது வழக்காதலின், “மரப்படுவது” என்கின்றார். கரத்தல் - மறைத்தல். கருணை - இரக்கம். அன்புறவு தோன்றக் “கண்ணனையாய்” என்று பரவுகின்றார். சிதடர் - மூடர்

.      இதனால், வாழ்வின் மயக்கத்தால் தம்பால் காணப்படுவன எனத் தியங்கல் முதலிய குற்றங்களை எடுத்துரைத்தவாறாம்.

     (2)