293. செய்திலேன் நின்தொண்டர் அடிக்குற் றேவல்
திருத்தணிகை மலையைவலஞ் செய்து கண்ணீர்ப்
பெய்திலேன் புலனைந்தும் ஒடுக்கி வீழ்தல்
பிறத்தலெனும் கடல்நீந்தேன் பெண்கள் தம்மை
வைதிலேன் மலர்கொய்யேன் மாலை சூட்டேன்
மணியேநின் திருப்புகழை வழுத்தேன் நின்பால்
எய்திலேன் இவ்வுடல்கொண் டேழை யேன்யான்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
உரை: மணியே, நின்னுடைய தொண்டர்களாகிய அடியவர்களுக்கு யான் பணி செய்வதில்லை; நீ எழுந்தருளும் திருத்தணிகை மலையை அன்புடன் வலம் வந்து கண்ணீர் சொரிவதில்லை; ஐம்புலன்கள் மேல் செல்லும் ஆசையைப் போக்கி இறத்தல் பிறத்தலாகிய கடலைக் கடந்திலேன்; பெண்கள் மேல் உண்டாகின்ற ஆசையை வெறுத் தொழிக்கிலேனில்லை; பூக்கள் கொய்து மாலை தொடுத்து உனக்கு அணிவதில்லை; உன்னுடைய திருப்புகழை ஓதி நின்னை யடையவில்லை; இவ்வுடலோடு பொருந்தி ஏழையாகிய யான் ஏன் பிறந்தேனோ? மண்ணுலகுக்குச் சுமையாய் இருக்கின்றேன், எ. று.
மணி போல்வானை மணி என்னும் வழக்குப் பற்றி முருகனை “மணியே” என்று பரவுகின்றார். அடியவர்க்கு அன்புடன் பணி செய்வது அப்பெருமானுக்குச் செய்யும் தொண்டாதலால், “நின் தொண்டர் அடிக்குற் றேவல் செய்திலேன்” என்று கூறுகிறார். தணிகை மலையில் வலம் வரும்போது வாயால் அவன் திருப்பெயரை ஓதுவதும், மனத்தால் அவன் திருவருளை நினைந்து அன்பு மிகுந்து கண்ணீர் சொரிவதும் இயல்பாதலால், “திருத்தணிகை மலையை வலஞ் செய்து கண்ணீர் பெய்திலேன்” என்றும் புகழ்கின்றார். பிறப்பிறப்புக்கள் எய்துதற்குக் காரணம் ஐம்புலன்களின் மேல் செல்லுகின்ற ஆசையாதலின், “புலனைந்தும் ஒடுக்கி வீழ்தல் பிறத்தல் எனும் கடல் நீந்தேன்” என்றும், பெண்ணாசையும் பிறவிக்குக் காரணமாதலை நினைந்து அவர் தொடர்பை வெறுத்தொழித்தேனில்லை என்பாராய்ப் “பெண்கள் தம்மை வைதிலேன்” என்றும் கூறுகின்றார். பூக்களைக் கொண்டு மாலை தொடுத்து முருகனுக்கு அணிவதும் வழிபாடாவது பற்றி, “மலர் கொய்யேன் மாலை சூட்டேன்” என்று சொல்லுகிறார். வைதல், ஈண்டு வெறுத்தொதுக்குவதைக் குறிக்கின்றது. கொய்யேன், முற்றெச்சம். முருகனுடைய திருப்புகழை முறை பிறழாமல் ஓதி வாழ்த்துவது ஞானம் பயக்கும் பத்தி நெறியாதலால், “திருப்புகழை வழுத்தேன் நின்பால் எய்திலேன்” என்றும், உடலோடு கூடி உலகிற் பிறந்ததன் பயன் இங்கே கூறியவாறு அன்புடன் பணி புரிந்து ஞானத்தால் வீடு பெறுவதாதலால், செய்யா தொழிந்தமைக்கு வருந்தி, “இவ்வுடல் கொண்டேழை யான் ஏன் பிறந்தேன்” எனவும், “புவிச் சுமையாய் இருக்கின்றேனே” எனவும் இயம்புகின்றார். பயன் இல்லாத உடலோடு கூடி யிருப்பது உயிர்க்கே யன்றி உலகுக்கும் சுமையாதலின், “புவிச்சுமையாய் இருக்கின்றேனே” எனப் புகன்று வருந்துகிறார். “கடல் தாயின நஞ்சும் உண்ட பிரான் கழல் சேர்தல் கண்டாய் உடல்தான் உளபயனாவ சொன்னேன் இவ்வுலகினுள்ளே” (பொன் வண். 13) என்று சேரமான் தெரிவிப்பது அறிக.
இதனால், உடல் கொண்டு பெறுதற்குரிய நலத்தைப் பெறுதற்கின்றி நாள் கழிந்தமை நினைந்து வருந்தியவாறாம். (3)
|