294. சீர்கொண்டார் புகழ்தணிகை மலையிற் சேரேன்
சிவபெருமான் பெற்றபெருஞ் செல்வ மேநின்
பேர்கொண்டார் தமைவணங்கி மகிழேன் பித்தேன்
பெற்றதே அமையுமெனப் பிறங்கேன் மாதர்
வார்கொண்டார் முலைமலைவீழ்ந் துருள்வே னாளும்
வஞ்சமே செய்திடுவேன் மதியொன் றில்லேன்
ஏர்கொண்டார் இகழ்ந்திடவிங் கேழை யேன்யான்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
உரை: சிவபெருமான் அருளிய செல்வப் பெரும் புதல்வனே, அன்பால் சிறப்புற்ற பெரியோர் புகழும் தணிகை மலைக்குச் செல்வதில்லேன்; நின்னுடைய பெயரைப் பெற்ற பெரியவர்களை வணங்கி இன்புறுவது இல்லாதவன்; பித்துடையவனாதலால் பெற்றது போதும் என அமையாமல் பேராசை மிக்குடையவனாவேன்; புற மகளிரின் கச்சணிந்த கொங்கையாகிய மலைமேல் வீழ்ந்து கிடப்பவன்; நாள்தோறும் வஞ்சச் செயல்களைச் செய்பவன்; நல்லறிவு சிறிது மில்லாதவன்; சிறப்புடைய மேலோர் கண்டு இகழும்படி ஏழையாகிய நான் ஏன் பிறந்தேனோ, மண்ணுக்குச் சுமையாய் இருக்கின்றேன், எ. று.
சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணில் தோன்றிய பெருமையுடையவனாதலால், “சிவபெருமான் பெற்ற பெருஞ் செல்வமே” என்று போற்றுகின்றார். புகழுடைய பொருளைப் புகழுடையார் புகழ்வர் என்பது பற்றிச் “சீர் கொண்டார் புகழ் தணிகைமலை” என்றும், இடத்து நிகழ்பொருளின் சிறப்பு இடத்துக்கும் சேர்வது போல முருகனது அருள் நலம் அவனிருக்கும் தணிகை மலைக்கும் உளதாம் என்ற கருத்தால் அதனைச் சென்று சேவிக்க வேண்டிய யான் அது செய்திலேன் என்பார், “தணிகை மலையைச் சேரேன்” என்றும் செப்புகின்றார். முருகனுடைய திருப்பெயரையுடையவர் நற்பேறு பெற்றவராதலின் அவரும் வணங்கத் தக்கவர் என்பது பற்றி, “நின்பேர் கொண்டார் தமை வணங்கி மகிழேன்” என்றும் புகழ்கின்றார். திருவருட் பெயரையிடுவது ஒரு நற்பேறு என்பதை, “நம்பிபிம்பி யென்று நாட்டு மானிடர் பேரிட்டால், நம்பும் பிம்புமெல்லாம் நாலு நாளிலழுங்கிப் போம், செம்பெருந் தாமரைக் கண்ணன் பேரிட்டழைத்தக்கால், நம்பிகாள் நாரணன் தம் மன்னை நரகம் புகாள்” என வரும் பெரியாழ்வார் பாட்டால் அறிக. பித்தேன் - பித்துடைய யான். பித்து - ஆசை. பேராசை யுடையவர்களுக்குப் பெற்றது போதும் என்ற மனம் இல்லாமையால் மேன்மேலும் ஆசை பெருகுவது போலும் தன்மை தனக்கு உண்டென்பார், “பித்தேன் பெற்றதே அமையும் எனப் பிறங்கேன்” என்று உரைக்கின்றார், வார் - மகளிர் மார்புக்கணியும் சட்டை. மகளிர் கொங்கையை மலை யென உருவகம் செய்தலால் அவற்றை விரும்பி யுறையும் செயலை, “வீழ்ந்துருள்வேன்” என்கின்றார். நெஞ்சிலொன்றும், வாயிலொன்றும், செய்கையிலொன்றுமாகக் கொண்டொழுகுவது வஞ்சச் செயல். மதி - இயற்கை யறிவு. ஏர் - அழகு; ஈண்டு குணஞ் செயல்களால் உண்டாகும் மேன்மை குறித்து நின்றது.
இதனால் தணிகை மலைக்குச் சென்று வணங்குதல் தணிகை முருகன் பெயருடையாரைப் போற்றுதல் முதலிய நற்செயல்கள் தம்மிடம் இல்லாமை யெடுத்துரைத்து இரங்கியவாறாம். (4)
|