295.

    காமாந்த காரியாய் மாதர் அல்குல்
        கடல்வீழ்ந்தேன் மதிதாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன்
    நாமாந்த கனையுதைத்த நாதன் ஈன்ற
        நாயகமா மணியேநல் நலமே உன்றன்
    பூமாந்தண் சேவடியைப் போற்றே னோங்கும்
        பொழில்கொள்தணி காசலத்தைப் புகழ்ந்து பாடேன்
    ஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ
        ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.

உரை:

     அச்சம் பொருந்திய எமனை யுதைத்து வீழ்த்திய சிவன் பெற்ற தலைமை சான்ற பெரிய மணி போல்பவனே, நலமே யுருவாகியவனே, காம வேட்கையால் குருடு பட்டு மகளிர் அல்குலாகிய கடலில் வீழ்ந்து அறிவு குறைந்து கவலை மிகுந்ததனால், உன்னுடைய தாமரைப் பூவைப் போன்ற அழகிய குளிர்ந்த சிவந்த திருவடிகளை நினையாதவனாய், உயர்ந்த சோலைகள் நிறைந்த தணிகை மலையைப் புகழ்ந்து பாடுதல் இல்லேனாயினேன்; இதனால் நின் திருவருட் செல்வத்தைப் பெறுவதின்றி ஏமாந்து பாவியாயினேன்; இத்தன்மையனான யான் ஏன் பிறந்தேனோ? இந்நிலவுலகிற்கு வீண் சுமையாக வன்றோ இருக்கின்றேன், எ.று.

     அந்தகாரி - குருடன். காமவேட்கையால் உண்மை காணும் திறமிழந்தவனைக் காமாந்தகாரி என்பர். மகளிர்பாற் பெறலாகும் காமவின்பத்தால் தலை தடுமாறி யலமரும் நிலையை, “மாதர் அல்குற் கடல் வீழ்ந்தேன்” என்றும், அறிவிழந்து கவலை யுற்று வருந்தும் துன்பத்தை, “மதி தாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன்” என்றும் இயம்புகின்றார். கடலில் வீழ்ந்தவர் கரையேற மாட்டாது பேரலைகளாற் கடற்கே யீர்க்கப் படுவதுபோலத் தன்கண் வீழ்ந்தாரைத் தன்னை நீங்காமல் பிணித்துக் கொள்வது மகளிரது காமக் கூட்டத்தின் இயல்பாதலால், மகளிர் இன்பப் பேற்றுக் கமைந்த உறுப்பை, “அல்குற் கடல்” என்று குறிக்கின்றார். உயர்ந்த பொருள்களையே உள்ளுதற்குரிய அறிவு இழிந்த காம நுகர்ச்சியின் மேற் செல்லுதலால், “மதி தாழ்ந்தேன்” எனவும், அதனாற் கவலையும் கையறவுமே எய்துதலால், “கவலை சூழ்ந்தேன்” எனவும் உரைக்கின்றார். வீழ்ந்தேன், தாழ்ந்தேன் என்பன முற்றெச்சம் . நாமம் - அச்சம். அந்தகன் - இயமன். நாம அந்தகன், நாமாந்தகன் என வந்தது. மார்க்கண்டனுக்காகச் சிவன் இயமனை யுதைத்த வரலாற்றை இங்கே நினைவிற் கோடலால், “நாமாந்தகனை யுதைத்த நாதன்” என்று சிவபெருமானைக் கூறுகின்றார். முருகன் மாணிக்க மணி போன்ற மேனியுடையனாதலால் மாணிக்க மணிகளில் சிறந்தது கிளத்தல் வேண்டி, “நாயகமாமணி” எனவுரைக்கின்றார். பூ எனப் பொதுப்பட மொழிதலால், செந்தாமரைப் பூ என உரைக்கப்பட்டது. மாத்தண் சேவடியெனற் பாலது, எதுகை யின்பம் நோக்கி மாந்தண் சேவடியென மெலிந்தது. சேவடி போற்றுதலும், புகழ்ந்து பாடலும் திருவருட்செல்வப் பேற்றுக்கு ஏதுவாவனவாகும். அவற்றைச் செய்யாமையால் அருட்பேற்றை இழந்தேன் என்பாராய், “ஏமாந்த பாவியேன்” என்றும், வருத்த மிகுதி தோன்ற, “அந்தோ அந்தோ” என்றும் இரங்குகின்றார். அடுக்கு, மிகுதிப் பொருட்டு. இவ்வாற்றல் பிறப்புப் பயனின்றாதலை எண்ணி “ஏன் பிறந்தேன்” எனவும், “புவிச் சுமையாய் இருக்கின்றேனே” எனவும் இயம்புகின்றார்.

     இதனால், காம வேட்கை மிகுதியால் அருட்பணிக்கு அமையா நிலைமையை எடுத்தோதியவாறாம்.

     (5)