296. நன்றறியேன் தீங்கனைத்தும் பறியேன் பொல்லா
நங்கையர்தம் கண்மாய நவையைச் சற்றும்
வென்றறியேன் கொன்றறிவார் தம்மைக் கூடும்
வேடனேன் திருத்தணிகை வெற்பின் நின்பால்
சென்றறியேன் இலையென்ப தறிவே னொன்றும்
செய்தறியேன் சிவதருமம் செய்வோர் நல்லோர்
என்றறியேன் வெறியேனிங் கந்தோ அந்தோ
ஏன்பிறந்தேன் புவிச்சுமையாய் இருக்கின் றேனே.
உரை: தணிகைப் பெருமானே, நல்லதன் நன்மை அறியாத நான் என்னிடத்தில் உள்ள தீய குணஞ் செயல்களை முற்றவும் போக்கினேன் இல்லை; பொல்லாத இயல்புகளை யுடைய பொய் மகளிருடைய கண்பார்வையில் விளையும் மாயங்களாகிய குற்றங்களைத் தடுத்திலேன்; பிற உயிர்களைக் கொன்று பயின்றவர்களோடு கூடித்திரியும் வேடனாவேனே யன்றித் திருத்தணிகை மலையில் எழுந்தருளும் நின்னுடைய திருமுன் யான் சென்றதில்லை; என்னிடம் வந்து கேட்பவருக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லத் தெரிவேனே தவிர ஓர் உதவியும் பிறர்க்குச் செய்ததில்லை; பிறரைப் பார்த்து இவர் சிவதருமம் செய்பவர், இவர் நல்லவர் என்று தெரிந்து கொண்டதில்லை; நன்மை ஒன்றும் இல்லாத வெறியவனாக இவ்வுலகில் ஏன் பிறந்தேனோ? அந்தோ, நான் இந்நிலத்திற்கு வெறும் சுமையாய் இருக்கின்றேன், எ. று.
நன்மை தீமைகளைப் பகுத்தறியும் இயற்கை அறிவு பெற்றிருந்தும் அதனால் அவற்றை அறியாமல் கெடுகின்றேன் என்பார், “நன்றறியேன் தீங்கனைத்தும் பறியேன்” என்கின்றார். பறிதல் - களைதல். பொருள் கவரும் எண்ணமும் செய்கையும் உடையராய் ஒழுகுதலால் பொருட் பெண்டிரைப் “பொல்லா நங்கையர்” எனவும், கட்பார்வையால் காம வேட்கையை எழுப்பிக் காணப்பட்டார் அறிவைச் சிதைத்துக் குற்றம்புரியச் செய்தலைப் புலப்படுத்தற்குக் “கண்மாய நவையைச் சற்றும் வென்றறியேன்” எனவும் உரைக்கின்றார். கண்மாயம் - கண்ணை மறைக்கும் செயல்; இதனைக் கண்கட்டு வித்தை எனவும் கூறுவர். “ஆய்ந்தேயிருப்பார் ஆரூர் புக்கார் அண்ணலார் செய்கின்ற கண்மாயமே” (ஆரூர்) என்று திருநாவுக்கரசர் கூறுவது காண்க. நவை - குற்றம். கொன்றறிவார் - உயிர்க் கொலை புரிவோர்; புலாலுண்போர். வேடன் - புலாலுண்டற் பொருட்டு விலங்கு பறவைகளை வேட்டை யாடுபவன். அவரோடு கூடி யொழுகுவதுபற்றித் தம்மை, “வேடனேன்” என வுரைக்கின்றார். வெற்பு - மலை. நன்றறியாமையும், மாயமகளிரின் கண் மாயத்துக்கு உள்ளாதலும் பிறவுமாகிய தீயோர் செய்வன செய்யும் இயல்பின்னாகிய யான் நல்லோர்க்குரிய நற்செயல் புரிவதில்லேன் என்பாராய்த் “திருத்தணிகை வெற்பில் நின்பாற் சென்றறியேன்” என்கின்றார். உளதென்னில் கேட்போர்க்குவ வேண்டுதலின், இல்லை யென்று சொல்லுவ தொன்றையே பயின்றுள்ளேன் என்பார், “இலை யென்பது அறிவேன், ஒன்றும் செய்தறியேன்” எனக் கூறுகின்றார். பிரிநிலை யேகாரம் தொக்கது. சிவதருமம் - சிவ நெறிக்குரிய அறங்களும் செயல்களுமாகும். “திறங்கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே, அறங்கொண்ட சிவதன்மம் உரைத்த பிரான்” (புள்ளிருக்கு) என்று ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. நன் ஞானமும் நல்லொழுக்கமும் உடைய நல்லாரே சிவதன்மம் செய்வோராதல் தோன்றச் “சிவதன்மம்” செய்வோர் நல்லோர் என்று அறியேன்” எனவும், நல்லதறிதலும், நல்லது செய்தலும் இல்லாமையால், “வெறியேன்” எனவும் இயம்புகின்றார்.
இதனால், தம்பால் நலத்துக்குரிய பண்பும் செயலும் இன்மையால் வாழ்வு வெறிதாயினமை உரைத்தவாறாம். (6)
|