297. அல்லார்க்கும் குழலார்மே லாசை வைப்பேன்
ஐயாநின் திருத்தாள்மே லன்பு வையேன்
செல்லார்க்கும் பொழிற்றணிகை யெங்கே யென்று
தேடிடேன் நின்புகழைச் சிந்தை செய்யேன்
கல்லார்க்கும் கடுமனத்தேன் வன்க ணேன்புன்
கண்ணினே னுதவாத கையேன் பொய்யேன்
எல்லார்க்கும் பொல்லாத பாவி யேன்யான்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையாய் இருக்கின் றேனே.
உரை: ஐயனே, இருண்ட கூந்தலையுடைய மகளிர்மேல் எனது ஆசையைச் செலுத்துவேனே யன்றி நின்னுடைய திருவடிக்கண் அன்பு செய்வதில்லை; மேகங்கள் படிந்து தவழும் சோலைகளை யுடைய தணிகைப் பதி எவ்விடத்தே யுளது என வழி காண முயன்றதில்லை; நின்னுடைய திருப்புகழைத் தானும் நினைந்ததில்லை; கல்லைப் போல் கடுமையுற்ற மனதில் வன்கண்மையும் புன்கண்மையும் உடையனாவேன் என் கைகளால் எவர்க்கும் யாதும் உதவுவதில்லை; வாயாற் பொய்யே புகலுவேன்; இவ்வகையால் யான் யாவருக்கும் பொல்லாத பாவியாயினேனாதலால், பிறந்தது ஏனோ? நிலத்துக்கு நானோர் சுமையானேன், எ. று.
அல்லார் குழலார் - கருமை நிறத்தால் இருள் நிறைந்தது போன்ற கூந்தலையுடைய மகளிர். ஆசை துன்ப விளைவினது; அன்பு, இன்பம் பயப்பது. செல் - மேகம். தணிகையில் முருகப் பெருமானைக் கண்டு மகிழ வேண்டுமென உண்மையான அன்பு உள்ளத்தில் உளதாயின் தணிகை யிருக்கும் திசையும், அதனைச் சென்று சேர்தற்குரிய வழியும் அறிய அவா வுண்டாமாதலால், “தணிகை யெங்கே என்று தேடிடேன்” என்றும், தணிகைப் பதியை நினைக்குமிடத்து அதனையுடைய முருகன் திருப்புகழ் நினைவில் எழுவது பற்றி, “நின் புகழைச் சிந்தை செய்யேன்” என்றும் எடுத்துரைக்கின்றார். கடுமை இறுகிய தன்மை. வன்கண்மை - இரக்கமில்லாமை. புன்கண்மை - சிறுமை காரணமாக வுண்டாகும் கீழ்மைத் தன்மை. நினைவும் செயலும் இவ்வாறு கீழ்மை யுறுதலால் யாவரும் வெறுத்தொதுக்குகின்றமை புலப்பட, “எல்லார்க்கும் பொல்லாத பாவியேன்” என நொந்துரைக்கின்றார்.
இதனால் திருத்தணிகை சென்று முருகனை வழிபட்டுப் போற்றாத புன்மையும் இரக்க மில்லாமையும் உற்று, நிலத்துக்குச் சுமையாம் திறம் விளம்பியவாறாம். (7)
|