298. அரும்பாய நகைமடவார்க் காளாய் வாளா
அலைகின்றே னறிவென்ப தறியே னின்பால்
திரும்பாத பாதகனேன் திருவொன் றில்லேன்
திருத்தணிகை மலைக்கேகச் சிந்தை செய்யேன்
கரும்பாய வெறுத்துவேம் பருந்தும் பொல்லாக்
காக்கையொத்தேன் சற்றேனும் கனித லில்லா
இரும்பாய வன்னெஞ்சக் கள்வ னேன்யான்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா யிருக்கின் றேனே.
உரை: முல்லை யரும்பு போன்ற பற்களை யுடைய மகளிரது இச்சைக்கு அடிமையாய் ஒரு பயனுமின்றி அலைகின்றேனே யன்றி, அறியத் தகுவதெனச் சிறப்பித் தோதப்படும் அறிபொருளை அறிந்திலேன்; நின் திருவருளை யெண்ணி நின்னிடம் மனம் திரும்பாத பாதகனானேன்; சிறப்புடைய நலம் ஒன்றும் இல்லாதவன்; நினது திருத்தணிகை மலைக்குச் செல்ல நினைவு கொள்ளாதவன்; கரும்பு போல் இனிப்பவைகளை வெறுத்துக் கசக்கின்ற வேம்பை விரும்பும் பொல்லாத காக்கையைப் போன்றவன்; சிறிதும் குழைதலில்லாத இரும்பொத்த நெஞ்சினையுடைய கள்வனாகிய யான் பிறந்தது ஏனோ? மண்ணுக்குப் பாரமாய் இருக்கின்றேன், காண், எ. று.
நகை - பல். இளமகளிர் பல்லுக்கு முல்லை யரும்பு உவமமாதல் மரபாதலால், “அரும்பாய நகை மடவார்” என்று குறிக்கின்றார். அவர்களின் ஆசை வழி நின்று அவர் உவப்பன செய்து திரிந்தமை தோன்ற, “மடவார்க்கு ஆளாய் வாளா அலைகின்றேன்” என உரைக்கின்றார். அறியத் தகுவதை அறிவது அறிவுடையோர்க்குக் கடனாதலால், “அறிவென்பது அறியேன்” எனவும், அறிந்தால், முருகப் பெருமான் திருவருளுண்மை யறிந்து, அதனைப் பெறுதற்கு மன நினைவு செல்லுமாதலால், செல்லாமை விளங்க, “நின்பால் திரும்பாத பாதகனேன்” எனவும், திருவருள் ஞானம் திருவாதலால், அதனைப் பெறும் தகுதி யொன்றும் இல்லாமை பற்றித், “திருவொன்றும் இல்லேன்” எனவும் இயம்புகிறார். பாதகம் - பெரிய குற்றம். திருத்தணிகைக்குச் சென்று முருகனைக் கண்டால், அச்செலவும் காட்சியும் சிந்தைக்கண் அத்திருவை எய்துவிக்கும் என்பாராய்த் “திருத்தணிகை மலைக் கேகச் சிந்தை செய்யேன்” என்று சொல்லி வருந்துகின்றார். நல்லன விருக்கத் தீயவற்றை விரும்பித் துன்புறும் செயலை விளக்குதற்குக் கரும்பிருக்க வேம்பு விரும்பும் காக்கையை உவமம் கூறுகின்றார். “வண்டு மலர்ச் சேர்க்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பன்றோ, காக்கை விரும்பும் கனி” (நன்னெறி) என்று சிவப்பிரகாசர் கூறுவது காண்க. சமண் சமய நெறி நின்று காலம் போக்கியதை நினைந்து வருந்திய திருநாவுக்கரசர், “கரும்பிருக்க இரும்பு கடித் தெய்த்த வாறே” (ஆரூர்) என்பர். கனிதல் - இளகுதல். நெஞ்சில் வன்கண்மையும், சொல்லில் மென்மையும் கொண்டு ஒழுகுவது விளங்க, “வன்னெஞ்சக் கள்வனேன்” என்று உரைக்கின்றார்.
இதனால், அறிவ தறியாது வன்னெஞ்சக் கள்வனாய்த் தீது புரிந்தமை நினைந்து வருந்தியது கூறியவாறாம். (8)
|