300. பண்ணேனின் புகழ்சொல்வோர் தமக்குப் பூசை
பாடேனின் திருச்சீரைப் பரம னீன்ற
கண்ணேநின் தணிகைதனைக் கண்டு போற்றேன்
கைகுவியேன் மெய்குளிரேன் கண்ணீர் பாயேன்
உண்ணேனல் லானந்த வமுதை யன்ப
ருடனாகே னேகாந்தத் துறவோ ரெண்ணம்
எண்ணேன்வன் றுயர்மண்ணேன் மனஞ்செம் புண்ணேன்
ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
உரை: சிவனாகிய பரமன் பெற்ற கண் போன்றவனே, நினது திருப்புகழை எடுத்தோதும் அடியவர்க்கு யான் பூசை செய்யேன்; நின்னுடைய சீர்த்திகளை யானும் பாடுவதில்லை; நீ எழுந்தருளும் தணிகைப் பெருங்கோயிலைக் கண்களாற் கண்டு போற்றுவதில்லை; கைகளைத் தலைமேற் குவித்து மெய் குளிரக் கண்ணீர் சொரிவதில்லை; அந்நிலையில் உள்ளத்தில் ஊறிப் பெருகும் ஆனந்தமாகிய அமிழ்தத்தைப் பருகுவதில்லை; பருகியின்புறும் அடியவர்களாகிய அன்பர் கூட்டத்தில் ஒருவனாவதில்லை; தனித்திருந்து பெறும் சிவயோகம் புரிதற்கு எண்ண மொன்றும் கொள்வதில்லை; என்னைப் பற்றி வருந்தும் துன்பத்துக் கேதுவாகும் கன்ம மலத்தைப் போக்கி கொள்வதில்லை; மனத்தின் சுழற்சியால் கணந்தோறும் புதுப்புண் உறுகின்றேன்; இவ்வாற்றல் ஏன் பிறந்தேனோ? அறியேன்; இந்நிலவுலகிற்குச் சுமையாக இருக்கின்றேன், எ. று.
பிரமன், திருமால், உருத்திரனாகிய மூவர்க்கும் மேலானவன் என்று கொண்டு, சிவனைப் பரமன் என்பது வழக்கு. சிவன் கண்களில் தோன்றியது பற்றிப் “பரமன் ஈன்ற கண்ணே” என்கிறார். தணிகை மலையைக் காண்பவர் முருகப் பெருமான் எழுந்தருளும் இடமாதலால் அதனை யவனாகவே நினைந்து தலைமேற் கைகுவித்து முருகா முருகா வென நாவால் நவின்று மெய் குளிரக் கண்ணீர் பெய்து பரவசமாதல் பற்றி, “நின் தணிகை தனைக் கண்டு கை குவியேன் மெய் குளிரேன் கண்ணீர் பாயேன்” எனவும், சிந்தைக்கண் ஞானானந்தத் தேனூறப் பெற்று அதனை யுண்டு இன்புறுப வாதலால், “உண்ணேன் நல்லானந்த அமுதை” எனவும் உரைக்கின்றார். பெற்ற ஞானாமிர்தத்தை மறவாது பேணுதற்கு அன்பர் கூட்டம் அரணாமாதலின், “அன்பர் உடனாகேன்” என்றும், ஞான வின்பம் மேன்மேலும் பெருகுதற்குத் தனித்திருந்து சிந்தையால் ஒன்றி நிற்றல் வேண்டுமாதலால், “ஏகாந்தத்துற வோர் எண்ணம் எண்ணேன்” என்றும் இயம்புகின்றார். இதனை, “ஒன்றியிருந்து நினைமின்கள்” என்பர் திருநாவுக்கரசர். நீக்கற்கரிய துன்பம் உண்டாதற் கேது அனாதி மலப்பிணிப் பாதலால் அதனைப் போக்கற்கு முயலேன் என்பார். “வன்துயர் மண்ணேன்” என்றும், நிலையின்றிக் கறங்கு முகத்தால் வினை மிகுவித்து நோய் செய்வது பற்றி, “மனம் செம்புண்ணேன்” என்றும் கூறுகின்றார். மனம் செய்யும் நினைவுகளால் உண்டாகும் புதுப்புண் என்றற்கு, “மனம் செம்புண்ணேன்” என்கிறார். செம்புண் - புதுப்புண். புண்ணேன் - புண்ணுடையேன்.
இதனால், தணிகையைக் கண்டு வழிபட்டுச் சிவயோகம் புரியாது மனம் புண்ணுறுகின்றேன் என வருந்தியவாறாம். (10)
|