23.
காணாப் பத்து
தணிகைப் பதியில் முருகப் பெருமானுடைய
சகளத் திருமேனியைக் கண்ணாரக் காணாமைக்கு வருந்திப்
பாடியன வாகலின் இது காணாப் பத்து எனப்படுகிறது. ஒருகால்
வடலூர் வள்ளற் பெருமான் திருத்தணிகை மலைக்குச் சென்ற
போது மூலத்தானம் போதிய விளக்கின்றி இருள் மண்டி
யிருந்தமையால் முருகன் திருவுருவைக் காணா மாட்டாராய்
வெளிப் போந்து மனம் வருந்தி இக்காணாப் பத்தைப்
பாடினா ரெனப் பெரியோர் கூறுவர் என்று பௌராணிகர் ஐயன்
குளம் பொன்னுச்சாமி முதலியார் சொல்லுவார். இதன்கண்
முருகன் திருவுருவைக் கண்ணாரக் காணின் உலக மயல் அகலும்;
பிறவி வேர் கல்லி யெறியப்படும்; பெண்ணாசை நீங்கும்;
சிவ ஞானப் பேறு உண்டாம்; பேரானந்தம் எய்தலாம் என
உரைப்பதும், காண்போர் உச்சிக் கூப்பிய கையாராய்க்
கண்ணீர் சொரிய ஆடியும்ப பாடியும் தொழுதும் அழுதும்
வழிபடுவதையும் எடுத்தோதுவதும் இப்பத்தின்கண் காணலாம்.
அறுசீர்க்
கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
301. வரங்கொ ளடியர் மனமலரில்
மகிழ்வுற் றமர்ந்த மாமணியே
திரங்கொள் தணிகை மலைவாழும்
செல்வப் பெருக்கே சிற்பரமே
தரங்கொ ளுலக மயலகலத்
தாழ்ந்துள் ளுருக அழுதழுது
கரங்கொள் சிரத்தோ டியானுன்னைக்
கண்க ளாரக் கண்டிலனே.
உரை: வரம் பெற்ற அடியவர்களின் மனமாகிய தாமரை மலரில் மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கின்ற பெரிய மாணிக்க மணியே, நிலைபெற்ற தணிகை மலையில் எழுந்தருளும் அருட் செல்வப் பெருக்கமே, ஞானத்தால் பரமாகியவனே, தரமுடைய உலகியல் மயக்கம் தீரத் திருவடியில் வணங்கி மனமுருகிப் பன்முறையும் அழுது தலையிற் கூப்பிய கைகளுடன் உன்னைக் கண்ணாரக் காணேனாயினேன், எ. று.
வரங்கொள் அடியர் - வேண்டும் நலங்களைப் பெறும் அடியார்கள். அன்பு நிறைந்த தூய மனமுடையவர்களாதலால் அவர்கள் மனத் தாமரையில் அன்புடன் எழுந்தருளுவது பற்றி, “வரங்கொள் அடியர் மனமலரில் மகிழ்வுற் றமர்ந்த மாமணியே” என்று கூறுகின்றார். மணியுடைமை. மேன்மேலும் பெருகும் இயல்பினையுடைய புண்ணியப் பொருளாய் விளங்குபவனாதலால் தணிகை முருகனைத் “தணிகை மலை
வாழும் செல்வப் பெருக்கே” என்று புகழ்கின்றார். செல்வம் - அருட் செல்வம். சிற்பரம் - ஞானத்தால் மேன்மை யுற்றவன்; ஞானமேயான பரம்பொருள் என்றுமாம். மேன்மை, கீழ்மை, பெருமை, சிறுமை முதலிய இயல்பு வேறுபாடுகளை யுடையது உலகியலாதலின், அதனைத் “தரங்கொள் உலக மயல்” எனவும், தன்கண் வாழ்வாரைப் பிணித்துத் தன்னின் மேலாய நிலைகளை ஏலாவாறு மயக்குவது பற்றி உலகியல் ஆசையை, “உலக மயல்' என்றும், அது நீங்கினாலன்றி மேனிலைத் திருவருள் வாழ்வளிக்கும் பரம்பொருளை அடைய முடியாதாதலால், “உலகமயல் அகல” என்றும், அதனை நீங்குதற்கு நேரிய வாயிலாவது, முருகப் பெருமானை நினைந்து அன்பால் வணங்கி மனமுருகிக் கண்ணீர் சொரிந்து அழுது வழிபடுதலாகும்; அதனைத்தாம் செய்யாமை பற்றி வருந்துவாராய்த் “தாழ்ந்துள்ளுருக அழுதழுது கரங்கொள் சிரத்தோடு யான் உன்னைக் கண்களாரக் கண்டிலன்” எனவும் உரைக்கின்றார். கரங்கொள் சிரம் - குவித்த கையை உச்சியில் கொண்ட தலை. தலைமேல் குவித்த கையுடன் பரவுகின்ற பெருமக்களை, “உச்சிக் கூப்பிய கையினர்” (முருகு) என நக்கீரர் கூறுவர்.
இதனால், தணிகை முருகனைக் கண்ணாரக் கண்டு மனமுருகிக் கண்ணீர் சொரிய வழிபடுவது உலக மயல் அறுதற்கேதுவாமாறு கூறியதாம். (1)
|