303.

    உருத்துள் இகலும் சூர்முதலை
        ஒழித்து வானத் தொண்பதியைத்
    திருத்தும் அரசே தென்தணிகைத்
        தெய்வ மணியே சிவஞானம்
    அருத்தும் நினது திருவருள்கொண்
        டாடிப் பாடி அன்பதனால்
    கருத்துள் உருகி நின்னுருவைக்
        கண்க ளாரக் கண்டிலனே.

உரை:

     வெகுளி கொண்டு மனத்தால் வேறுபட்டொழுகிய அசுரர் முதல்வனான சூரவன்மாவை வென்றொடுக்கி வானுலகத்துப் பழம்பதியான அமராவதியை சீர் செய்த அருளரசே, அழகிய தணிகையில் இருந்தருளும் தெய்வமணியே, சிவஞானத்தை நல்கி யருளும் நின்னுடைய திருவருளைப் பெற்று எய்தும் மகிழ்ச்சியால் ஆடியும் பாடியும், பெருகும் அன்பினால் மனமுருகி நினது திருவுருவை என் கண்ணாரக் காணேனாயினேன், எ.று.

     உருகுதல் - சினத்தால் கண் சிவந்து நோக்குதல். உள் இகலுதல் - உள்ளத் தெழும் கோபத்தால் பகைமையுற்று மாறுபட்டொழுகுதல்; உள்ளத்தே பகைமை கொண்டு மாறாவன செய்தல். சுரர்களாகிய தேவர்கட்குத் தீங்கு செய்தும், அவர்கள் தலைவனாகிய இந்திரன் மகனைச் சிறையிட்டும், தேவர் தலைநகரமாகிய அமராவதியைச் சூறையாடியும் துன்புறுத்தியவன் அசுரர்கட்கு முதல்வனான சூரவன்மா; அதனால், அச்சூரவன்மாவை, “உருத்துள் ளிகலும் சூர்முதல்” என உரைக்கின்றார். “சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்” (முருகு) என நக்கீரர் கூறுவது காண்க. சூரவன்மாவின் வலி யழித்து வென்று ஒடுக்கின புராண வரலாறு பற்றிச் “சூர் முதலை யொழித்து” என்றும், அவனால் நிலை குலைத்துக் கெடுக்கப்பட்ட தேவர் நாட்டைச் சீர் செய்தமையால் முருகக் கடவுளை, “வானத்து ஒண்பதியைத் திருத்தும் அரசே” என்றும், இது வெற்றி வேந்தர் செயலாதலால், “அரசே” என்றும் போற்றுகின்றார். சங்கச் சான்றோர் இச்செய்கையைத் “துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றி” (பதிற். 32) என்பர். தெய்வமணி - தெய்வமாகிய மணி. முருகன் சிவஞானத் திருவுருவினனாதலால், அவனது திருவருளும் ஞானமாம் என்பது கொண்டு, “சிவஞானம் அருந்தும் நினது திருவருள்” என்றும், அருள் பெற்றவர் ஞானநாட்டம் எய்தி முருகனது ஞான வுருவைக் காண்பரெனச் சான்றோர் அறிவுறுத்தலால், “நினது திருவருள் கொண்டு நின்னுருவைக் கண்களாரக் கண்டிலன்” என்றும் இசைக்கின்றார். திருவருள் ஞானம் பெற்றோர், அன்பு மீதூர்ந்து நெஞ்சம் உருகி ஆடியும் பாடியும் இன்புறுவது விளங்கத் “திருவருள் கொண்டு ஆடிப் பாடிக் கருத்துள்ளுருகி” என உரைக்கின்றார்.

     இதனால், திருவருளால் ஞான நாட்டம் பெற்றோர் முருகன் திருவுருவைக் கண்ணாரக் காண்பர் என்று கூறியவாறாம்.

     (3)