304.

    போத லிருத்த லெனநினையாப்
        புனிதர் சனனப் போரோடு
    சாத லகற்றும் திருத்தணிகைச்
        சைவக் கனியே தற்பரமே
    ஓத லறியா வஞ்சகர்பால்
        உழன்றே மாதர்க் குள்ளுருகும்
    காத லகற்றி நின்னுருவைக்
        கண்க ளாரக் கண்டிலனே.

உரை:

    இறப்புப் பிறப்புகளைப் போதலும் இருத்தலும் என நினைந்து பிறப்புக் கேதுவாகிய வினைவகையோடு போராடித் தற்காக்கும் தூயவர்க்கு அப்பிறப்பிறப்புக்கள் எய்தாவாறு நீக்கியருளும் திருத்தணிகைச் சைவமணியே, தற்பரமே, கற்பன கற்றறியாத வஞ்ச மக்களோடு கூடி வருந்துவதோடு மகளிர் பொருட்டு மனமுருகிக் கெடப் பண்ணும் காம இச்சையைப் போக்கி நின் திருவுருவைக் கண்ணாரக் காணேனாயினேன், எ. று.

     இறப்புப் பிறப்புக்களைப் போக்கு வரவு எனச் சான்றோர் கூறும் வழக்குப் பற்றிப் “போதல் இருத்தல்” எனக் குறிக்கின்றார். இருத்தல், ஈண்டுப் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைநிலை மேற்று; அதுவும் இறத்தலில் முடிதலால், இறப்புக் காயிற்று. நினையா, செய்யா வென்னும் வினையெச்சம். பிறப்பிறப்புகட்கும் காரணம் வினை வகையாதலின், பிறப்பறுக்க முயல்பவர் அவ்வினைகள் தம்மைச் சாராவாறு தற்காக்கச் செய்யும் முயற்சியைச் “சனனப் போர்” என்று குறிக்கின்றார். அவரது போர் வீடு பேற்றாலன்றி உயிர் உடம்பினின்று நீங்கும் சாக்காட்டால் முடிவு பெறாமையால், “சாதல் அகற்றும் திருத்தணிகைச் சைவக் கனியே” எனப் புகல்கின்றார். புனிதர் - பிறப்பிறப்புக் கேதுவாகிய மலவிருள் நீங்கிய தூய ஞானிகள், அவர்கட்கு இன்றியமையாத திருவருள் ஞானம் தந்து பிறப்பிறப்புப் போரை நீக்கியுதவுகின்றான் முருகப் பெருமான் என்பது கருத்து. சிவஞானப் பயனாயவன் என்றற்குச் “சைவக் கனியே” எனவும், தனிப்பரம் பொருள் என்றற்குத் “தற்பரம்” எனவும் எடுத்தோதுகின்றார். கற்பன கற்றறியாதவர் வஞ்சம் புரிதற் கஞ்சாரதலால் “ஓதலறியா வஞ்சர்” என்றும், அவரது கூட்டுறவு காமக் களியாட்டத்துக்கு இரையாக்குவதுபற்றி, “மாதர்க்குள்ளுருகும் காதல்” என்றும், இரண்டும் நீங்கினாலன்றி நன்ஞானக் கண் கொண்டு முருகப் பெருமானைக் காணும் நலம் எய்தாது என்பார், “காதல் நீக்கி நின்னுருவைக் கண்களாரக் கண்டிலனே” என்றும் இயம்புகின்றார். புனிதர் என்றவிடத்துப் பொருட்டுப் பொருளதாய குவ்வுருபு தொக்கது. சைவக் கனி யென்பதற்குச் சிவமூர்த்தமாகிய மரத்திற் பழுத்த கனி எனினும் அமையும். “சிவமூர்த்தியென் றெழுவார் சிந்தை யுள்ளால் உற்றதோர் நோய் களைந்திவ் வுலகமெல்லாம் காட்டுவான்” (கழிப்பாலை) என நாவுக்கரசர் நவில்வது காண்க.

     இதனால், வஞ்சகர் உறவும் மகளிர் மேற் செல்லும் காதலும் நீக்கற்கு முருகனைக் கண்ணாரக் காண்டல் வேண்டும் என விரும்பியவாறாம்.

     (4)