305.

    வீட்டைப் பெறுவோ ருள்ளகத்து
        விளங்கும் விளக்கே விண்ணோர்தம்
    நாட்டை நலஞ்செய் திருத்தணிகை
        நகத்தி லமர்ந்த நாயகமே
    கேட்டைத் தருவஞ் சகவுலகில்
        கிடைத்த மாய வாழ்க்கையெனும்
    காட்டைக் கடந்து நின்னுருவைக்
        கண்க ளாரக் கண்டிலனே.

உரை:

     முத்தி வீடு பெறுதற் கமைந்த ஞானவான்களின் சிந்தையில் ஒளி செய்யும் ஞானவிளக்கே, தேவர்கள் வாழும் நாட்டுக்கு நலம் புரியும் திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் தலைவனே, கேடு விளைவிக்கும் வஞ்சக வுலகில் பெறப்பட்ட மாயம் பொருந்திய வாழ்க்கை யெனப்படும் காட்டைக் கடந்து நின்னுடைய திருவுருவைக் கண்ணாரக் காணேனாயினேன், எ. று.

     பிறவாப் பேரின்ப நிலையை வீடு என்பர்; அதனைப் பெறுதற்குச் சமைந்தோர் ஞானவான்கள்; அவர்களது திருவுள்ளத்தில் அமர்ந்து மெய்ஞ்ஞான வொளி செய்வது தோன்ற, “வீட்டைப் பெறுவோர் உள்ளகத்து விளங்கும் விளக்கே” என்று புகல்கின்றார். அசுரர்களால் அழிவுற்ற தேவர்களின் நாட்டை, அசுரர்களை யழித்துச் செம்மையுறச் செய்த முருகப் பெருமானது அருட்செயலை நினைந்து, “விண்ணோர்தம் நாட்டை நலம் செய் திருத்தணிகை நாயகமே” என்று கூறுகின்றார். திருத்தணிகை நகம் - திருத்தணிகை மலை . நாயகம் - தலைமை. வஞ்சனை நிறைந்த நினைவும் சொல்லும் செயலும் கேடுவிளைப்பன வென்றற்குக் “கேட்டைத் தரும் வஞ்சகம்” எனவும், வஞ்சகமே மிக்கிருக்கும் நிலைமை நோக்கி, “வஞ்சக வுலகு” எனவும், இதன்கண் வாழும் வாழ்க்கை ஒருவர் தாமே பெறுவதன் றென்றற்குக் “கிடைத்த மாய வாழ்க்கை” எனவும் கூறுகின்றார். பின் விளைவதறியாவாறு வாழ்வோர் அறிவு மறைக்கப்பட்டு இருள் சூழ்ந்து கிடப்பதுபற்றி, “மாய வாழ்க்கையெனும் காடு” என்றும், இதனைக் கடந்தாலன்றித் திருவருட்பேறு எய்தாமை தேர்ந்து, “வாழ்க்கை யெனும் காட்டைக் கடந்து நின்னுருவைக் கண்களாரக் கண்டிலனே” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், வாழ்க்கை யெனும் காட்டைக் கடந்து நின்னுடைய திருவருளைப் பெறுதற்கான ஞானம் அருளுக எனக் குறிப்பாய் வேண்டியவாறாம்.

     (5)