306.

    மட்டித் தளறு படக்கடலை
        மலைக்கும் கொடிய மாவுருவைச்
    சட்டித் தருளும் தணிகையிலெந்
        தாயே தமரே சற்குருவே
    எட்டிக் கனியா மிவ்வுலகத்
        திடர்விட் டகல நின்பதத்தைக்
    கட்டித் தழுவி நின்னுருவைக்
        கண்க ளாரக் கண்டிலனே.

உரை:

     நாற்புறமும் வளைத்துச் சேறுண்டாகக் கலக்கிக் கடலை அலைத்தழிக்கும் கொடிய மாவுருவில் நின்ற சூரவன்மாவை அழித்தருளிய தணிகைப் பதியில் எழுந்தருளும் எந்தையே, என் உறவே, மெய்யுணர்த்தும் குருவே எட்டிக் கனி போல் வெறுப்பை நல்கும் இவ்வுலகியல் துன்பத்திலிருந்து நீங்குதற் பொருட்டு நின்னுடைய திருவடியைப் பற்றிப் பெறும் ஞானக் கண்களால் நினது திருவுருவை முற்றவும் காணேனாயினேன், எ. று.

     மட்டித்தல் - வளைத்தல்; அளறுபடல் - கலங்கிச் சேறாதல். மலைத்தல் - போராடுதல் . கலக்கினும் சேறாகாத கடலையும் சேறுபட அலைக்கும் வலி படைத்தவன் சூரவன்மா என்றற்கு, “மட்டித் தளறுபடக் கடலை மலைக்கும் கொடிய மாவுரு” என்று கூறுகின்றார். கடற்கண் நிகழ்ந்த போராதலின், முருகப் பெருமான் கடற்குட் புகுந்து அதனைக் கலக்கிச் சூரனை வீழ்த்தான் என்பாராய்ப் “பார் முதிர் பனிக் கடல் கலங்க வுட்புகுந்து சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்” என்று முருகாற்றுப் படையும், “நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி அணங்குடையவுணர் ஏமம் புணர்க்கும், குருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் கடுஞ்சின விறல் வேள்” என்று பதிற்றுப் பத்தும் கூறுகின்றன. சூரவன்மா மாவுருக் கொண்டு பொரு தான் என்று புராணம் கூறுவதால், சூரவன்மா என்னாது “மாவுருவை” என்று குறிக்கின்றார். மா - மாமரம். “கவிழிணர் மா” என நக்கீரர் கூறுவர். சட்டித்தல் - அழித்தல். சூரனது ஆற்றலை யழித்துச் சேவலும் மயிலுமாய்த் தோன்றினானாகச் சேவலைக் கொடியாகவும், மயிலை ஊர்தியாகவும் கொண்டருளினான் என்பதனால், 'சட்டித்து' என்றதோடமையாது, “அருளும்” என வுரைக்கிறார். அருள் குறித்து “எந்தாயே” என்றும், ஆதரவு செய்தல் பற்றித் “தமரே” என்றும், மெய்யுணர்வு தருவதால் “சற்குருவே” என்றும் இயம்புகின்றார். உலக வாழ்வில் துன்பங்கள் தொடர்ந்து தாக்கி வெறுப்பை யுண்டு பண்ணுவதால், “எட்டிக் கனியாம் இவ்வுலகம்” எனவும், இத்துன்பத்தினின்றும் நீங்கி உய்தி பெறுதற்குத் “திருவடிப் பேறல்லது வேறில்லாமையால் இவ்வுலகத் திடர் விட்டகல நின் பதத்தைக் கட்டித் தழுவி” எனவும், திருவடி ஞான நிலையமாதல் பற்றி ஞானக்கண் கொண்டு நின் திருவுருவைக் காண்டல் வேண்டும் என்பாராய், “நின்னுருவைக் கண்களாரக் கண்டிலனே” எனவும் உரைக்கின்றார்.

     இதனால், திருவடி ஞானத்தின் இன்றியமையாமை விளம்பியவாறாம்.

     (6)