308.

    விரைவாய்க் கடப்பந் தாரணிந்து
        விளங்கும் புயனே வேலோனே
    தரைவாய்த் தவத்தால் தணிகையமர்
        தருமக் கடலே தனியடியேன்
    திரைவாய்ச் சனனக் கடற்படிந்தே
        தியங்கி யலைந்தேன் சிவஞானக்
    கரைவா யேறி நின்னுருவைக்
        கண்க ளாரக் கண்டிலனே.

உரை:

     நறுமணம் கமழும் கடப்ப மாலை யணிந்து விளங்கும் தோள்களை யுடையவனே, வேற்படையைக் கையில் ஏந்துபவனே, நிலவுலகில் தணிகைப் பதி செய்த தவத்தால் அங்கு எழுந்தருளும் அறக் கடலே, தனியடியனாகிய யான் பிறவியாகிய கடலில் வீழ்ந்து அறிவு கலங்கி ஞானத் தெளிவின்றி அலைகின்றேன்; சிவஞானமாகிய கரை கண்டு நின் திருவுருவைக் கண்ணாரக் காண்பது இல்லாதவனாயினேன், எ. று.

     விரை - நறுமணம். தணிகைப் பதி செய்த தவத்தின் பயனாக அப்பதியில் முருகப் பெருமான் எழுந்தருளுகின்றா னென்பது தோன்றத் “தரைவாய்த் தவத்தால் தணிகை யமர் தருமக் கடலே” என்று புகல்கின்றார். தரை - நிலவுலகம். இறைவனை “அறவாழி” எனச் சான்றோர் கூறுவதால், “தருமக் கடலே” என மொழிகின்றார். அடியார் கூட்டத்துள் சேர்ந்திலேன் என்பார், “தனியடியேன்” எனத் தம்மைக் குறிக்கின்றார். சனனம் - பிறப்பு . சனனத்தைக் கடல் என்பதால் அதற்கேற்பத் “திரைவாய்ச் சனனக் கடல்” என்கின்றார். திரை - அலை. பிறவியுற்றோர் இடையற வில்லாத இருவினைகளில் ஈடுபட்டும் அவற்றின் பயனை நுகர்வதால் அறிவிற் கலக்கமும் மெய்யால் அலைதலுற்று வருந்துவதும் விளங்கச் “சனனக் கடற் படிந்து தியங்கி யலைந்தேன்” எனவும், நினது ஞானத் திருவுருவக் காட்சியால் சிவஞானம் பெற்றுப் பிறவிச் சூழலினின்று வீடு பெற வேண்டும் மென்பாராய்ச் “சிவஞானக் கரையேறி நின்னுருவைக் கண்களாரக் கண்டிலன்” எனவும் உரைக்கின்றார்.

     இதனால், சிவஞானப் பேற்றால் நின் திருவுருவைக் காண்டல் வேண்டுமென விளம்பியவாறாம்.

     (8)