309. பள்ள வுலகப் படுகுழியில்
பரிந்தங் குழலா தானந்த
வெள்ளத் தழுந்து மன்பர்விழி
விருந்தே தணிகை வெற்பரசே
உள்ள மகல அங்குமிங்கும்
ஓடி யலையும் வஞ்சநெஞ்சக்
கள்ள மகற்றி நின்னுருவைக்
கண்க ளாரக் கண்டிலனே.
உரை: உலகியலாகிய ஆழ்ந்த படுகுழியில் வீழ்ந்து வருந்தி யுழலாமல் பேரின்பமாகிய கடலில் மூழ்கி இன்ப மெய்தும் மெய்யன்பர் கண்கட்கு விருந்தாய் விளங்குபவனே, தணிகை மலையை யுடைய அரசனே, உள்ளத்திற் படியும் அகந்தை நீங்க, அதனால் அங்குமிங்கும் ஓடித் திரியும் வஞ்சம் பொருந்திய நெஞ்சில் நிலவும் கள்ள நினைவுகளைப் போக்கி நினது திருவுருவைக் கண்ணாரக் காணேனாயினேன், எ. று.
படுகுழி - வீழ்ந்தாரை எழவொட்டாமல் புதைக்குழிக்கும் குழி; பள்ளம்; ஈண்டு ஆழம் குறித்து நிற்கிறது. பள்ளப் படுகுழி போல் உலக வாழ்வும் தன்னின் நீங்க விடாமல் மேன்மேலும் பிறந்திறந்து துன்புறச் செய்தலால், உலகப் படுகுழி என உருவகம் செய்கின்றார். பரிதல் - வருந்தி யிரங்குதல். உழலுதல் - வருந்துதல். மெய்யன்பர்கள் ஞானப் பேரின்பத்தில் திளைப்பவராயினும், செல்வர்க்கே செல்வம் சேர்வது போல, அவர்களின் ஞானப் பார்வைக்கே புத்தின்பம் தந்து மகிழ்விப்பது நினைந்து, “அன்பர் விழி விருந்தே” எனப் புகழ்கிறார். விருந்து - புதுமை. உள்ளம், ஈண்டு ஆகு பெயராய் அதன்கண் படியும் அகந்தையைக் குறிக்கிறது. உண்மையறிவை மறைத்து யான் எனதென்னும் செருக்கைத் தூண்டி நன்றல்லாத நெறியில் நெஞ்சைச் செலுத்தி அலைப்பது தோன்ற, “உள்ளம் அகல” எனவும், “அங்கு மிங்கும் ஓடியலையும் நெஞ்சம்” எனவும் எடுத்துரைக்கின்றார். நன்னினைவு நிகழும் போதே அடியில் தீய நினைவும் படிந்து கிடப்பதால், “வஞ்ச நெஞ்சக் கள்ளம்” என்றும், உள்ளத் தகந்தை போல நெஞ்சத்துக் கள்ளமும் நீங்கினாலன்றி ஞானக்காட்சி யுண்டாகா தென்றற்கு, “நெஞ்சக் கள்ள மகற்றி நின்னுருவைக் கண்களாரக் கண்டிலனே” என்றும் இயம்புகின்றார். “கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டருத்தியோ, டுள்ள மொன்றி யுள்குவார் உளத்துளான்” (ஆரூர்) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க.
இதனால், உள்ளத் துறையும் அகந்தையும் நெஞ்சத் துள்ள கள்ளமும் அகற்றி நின்னைக் கண்ணாரக் காணும் பேற்றினை அருள்க என முறையிட்டவாறாம். (9)
|