31. நான்கொண்ட விரதநின் னடியலாற் பிறர்தமை
நாடாமை யாகுமிந்த
நல்விரத மாங்கனியை இன்மையெனு மொருதுட்ட
நாய்வந்து கவ்வி யந்தோ
தான்கொண்டு போவதினி யென்செய்வே னென்செய்வேன்
தளராமை யென்னும் ஒருகைத்
தடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன்
தன்முகம் பார்த் தருளுவாய்
வான்கொண்ட தெள்ளமுத வாரியே மிகுகருணை
மழையே மழைக் கொண்டலே
வள்ளலே யென்னிருகண் மணியே யெனின்பமே
மயிலேறு மாணிக்கமே
தான்கொண்ட சென்னையிற் கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை: தக்க இடம் பெற்ற சென்னை நகர்க் கந்த கோட்டத்துள் கோயில் கொண்டருளும் கந்த வேட் கடவுளே, தண்ணிய ஒளி பொருந்திய தூய மணிகளிற் சைவ மணியாகத் திகழும் ஆறுமுகங்களையுடைய தெய்வ மணியே, பெருமை பொருந்திய தெள்ளிய அமுதக் கடல் உருவாயவனே; மிக்க கருணையாகிய மழையே; அம் மழையைப் பொழியும் மேகமே, வள்ளலே, என்னுடைய இரண்டு கண்ணின் மணி போல்பவனே, யான் பெறும் இன்ப வடிவே, மயில் மேல் இவர்ந்து வரும் மாணிக்க மணியே, நான் கொண்ட கொள்கை நின்னுடைய திருவடியன்றிப் பிறரை நாடிச் செல்லாமையாகும்; இந்த நல்ல கொள்கையாகிய கனியை இல்லாமை யென்னும் ஒரு துட்டத்தனம் படைத்த நாய் போந்து தன் வாயாற் கவ்வி, ஐயோ, இப்போது ஓடுகிறதே, இதற்கு நான் என்ன செய்வேன்? தளர்ச்சியில்லாமை என்ற ஒரு கைத் தடி கொண்டு அடித்துத் துரத்தவோ போதிய வன்மையில்லாதவனா யுள்ளேன்; அதனாற் சிறியனாகிய எனது முகம் பார்த்து அருள்வலி நல்க வேண்டுகிறேன். எ. று.
தானம் - இடம்; இதுதான் என வந்தது. வான் - பெருமை. அமுத-வாரி - அமுதக் கடல். மழைக் கொண்டல் - மழையைப் பொழியும் மேகம். குணத்தைக் குணியாகக் கூறும் மரபு பற்றி, இன்பந் தருவதுபற்றி முருகனை, இன்பமே என்று கூறுகிறார். மாணிக்கம், செம்மை நிறமும் ஒளியும் கொண்டு உயர் பொருளாக மதிக்கப்படுவது; அது போலுதலால் “மாணிக்கமே” எனவுரைக்கின்றார். விரதம் - கொள்கை. நின்னையன்றிப் பிறரை நாடாமை என்பார், “நின் அடியலால் பிறர்தமை நாடாமை” என்று இயம்புகிறார். விரதத்தைக் கனியாக உருவகம் செய்கின்றமையின், “விரதமாம் கனியை” என விளம்புகின்றார். “விரதமாங் கனியை” இரட்டுற மொழிதலாகக் கொண்டு “விரதமாகிய மாங்கனியை” என்றலும் ஒன்று. உணர் வொழுக்கங்களையும் பிறநலங்களையும் கெடுப்பதாகலின் வறுமையை, “இன்மையெனும் ஒரு துட்ட நாய்” என்று ஏசுகின்றார். திருவள்ளுவனார், “இன்மையென வொரு பாவி” என்பது காண்க. துஷ்ட நாய் என்பது துட்ட நாய் என வந்தது. “துட்டராம் அமணர்” (ஆலவாய்) என ஞானசம்பந்தர் வழங்குவது காண்க. வறுமையால் என் விரதம் கெடுகிற தென்பார், “இன்மை யெனும் ஒரு துட்ட நாய் வந்து கவ்வி அந்தோ தான் கொண்டு போவது இனி என் செய்வேன் என் செய்வேன்” என்று முறையிடுகின்றார். தொண்டராயினார் இன்மையுற்று உணவுக்கு வருந்த லாகாது என்ற கருத்தால் ஞானசம்பந்தர், “தொண்டர் வந்து வணங்கி மாமலர் தூவி நின் கழலேத்துவார் அவர், உண்டியால் வருந்த இரங்காதது என்னைகொலாம்” (ஆமாத்தூர்) என்று சிவன்பால் முறையிடுவது ஈண்டு நினைவு கொள்ளற் பாலது. நாயைத் தடி கொண்டு அடித்துத் துரத்துவது உலகவர் செயலாதலால், அதனை நினைந்து, “ஒரு கைத்தடி கொண்டு அடிக்கவோ வலியிலேன்” என்று கூறுகிறார். இன்மை யுற்றோர்க்குத் தளர்ச்சி எய்துவது இயல்பாதலின் தளராமையைத் தடியாக உருவகம் செய்கிறார். தளர்ச்சியால் வலி யழிந்தொழிதல் தோன்ற, “வலியிலேன்” என்றும், வலியில்லாமை சிறுமை ஆதலால் “சிறியனேன்” என்றும், முகத்தைப் பார்த்த விடத்துத் தளர்ச்சி தோன்றிப் பார்ப்பவர் மனத்தில் இரக்கம் எய்துவிக்கும் என்ற கருத்தால் முகம்பார்த் தருளுவாய்” என்றும் இயம்புகிறார்.
இதனால் எனது விரதம் வறுமையால் கெடுவது கண்டு, அதனைப் போக்கியருளுக என்பதாம். (31)
|