310. அடலை யணிந்தோர் புறங்காட்டில்
ஆடும் பெருமா னளித்தருளும்
விடலை யெனமூ வரும்புகழும்
வேலோய் தணிகை மேலோயே
நடலை யுலக நடையளற்றை
நண்ணா தோங்கு மானந்தக்
கடலை யடுத்து நின்னுருவைக்
கண்க ளாரக் கண்டிலனே.
உரை: மேனி முற்றும் நீறணிந்து சுடு காட்டில் ஆடும் பெருமானாகிய சிவன் அளித்த காளை என்று பிரமன் முதலிய தேவர் மூவரும் போற்றிப் புகழும் வேற்படையை யுடைய முருகப் பெருமானே, தணிகையில் எழுந்தருளும் மேலவனே, பொய்யான உலக வாழ்வாகிய சேற்றில் அழுந்தாமல் உயர்ந்த பேரின்பக் கடலை யடைந்து ஞானத்தால் நின்னுடைய திருவுருவைக் கண்ணாரக் காணேன், எ. று.
அடலை - சாம்பல்; தீயால் எரிக்கப்படுவது பற்றி நீறாகிய சாம்பலை அடலை என்கிறார்; ஈண்டு அது திருநீற்றின் மேற்று. புறங்காடு - சுடுகாடு. என்றும் இளமை மாறாதவனாதலால் முருகனை, “விடலை” எனச் சிறப்பிக்கின்றார். மூவர் - பிரமன் திருமால் உருத்திரன். தணிகை மேலோன் - தணிகை என்றலும் ஒன்று. மேலோன் மேன்மைக் குணஞ் செயலுடையவன். நடலை - பொய். உலக வாழ்வின் நிலையாமையும் அதன்கண் நிலவும் வஞ்சமும் தீமையும் கருதி, “நடலை யுலக நடை” எனவும், உற்றாரை நீங்காவாறு தன்கண் புதைந்து கெடச் செய்வது பற்றி, “அளறு” எனவும் உரைக்கின்றார். “நடலை வாழ்வு” என நாவுக்கரசர் குறிப்பது காண்க.
இதனால், பொய்யான உலக வாழ்க்கையை விரும்பாமல் மெய்யான பேரின்ப வாழ்வை யுற்றோர் நின்னுடைய திருவுருவைக் கண்ணாரக் கண்டு இன்புறுவர் எனத் தெரிவித்தவாறாம். (10)
|