24.
பணித்திறம் சாலாமை
பணித்திறஞ்
சாலாமையாவது பணி செய்தற்குரிய கூறுபாடு இல்லாமை
தெரிவிப்பது. சாலாமை - ஈண்டு இல்லாமை மேற்று. பணி என்பது
நெஞ்சால் நினைத்தலும், வாயால் போற்றுதலும், மெய்யால்
வணங்கித் தொழுவது மாகிய இறை வழிபாட்டுச் செயல்.
இப்பணிக்குரிய உள்ளம் மகளிர் மயக்கால் நினைவு
மாறிக் குறை யுற்றமை இப்பத்தின் கண் பன்முறை நினைந்து
பாட்டுத் தோறும் குறிக்கப்படுகிறது.
கலி
விருத்தம்
311. வஞ்சகப் பேதையர் மயக்கி லாழ்ந்துழல்
நெஞ்சகப் பாவியேன் நினைந்தி லேனையோ
வெஞ்சகப் போரினை விட்டு ளோர்புகழ்
தஞ்சகத் தணிகைவாழ் தரும வானையே.
உரை: வெவ்விய உலக வாழ்க்கையாகிய போராட்டைத் துறந்த ஞானிகள் புகழும் புகலிடமாகிய தணிகையில் எழுந்தருளும் தருமவானாகிய முருகப் பெருமானைப் பொருள் கருதி வஞ்சம் புரியும் மகளிர் மயக்கில் வீழ்ந்து வருந்தும் நெஞ்சினையுடைய பாவியாகிய யான் நினையா தொழிந்தேன்; ஐயோ, எனக்கு உய்தி யுண்டோ? எ.று.
நெஞ்சில் வஞ்சம் கொண்ட பொருட் பெண்டிரை, “வஞ்சகப் பேதையர்” எனவும், பொருள் கவர்தல் வேண்டி நெஞ்சிலொன்றும் வாயிலொன்றும் செயலிலொன்றும் நினைந்தும் சொல்லியும் செய்தும் பொருளுடையாரை மயக்கம் மயக்கத்தில் அறிவிழிந்து வருந்தும் நிலையைத் தெரிவிப்பாராய், “மயக்கில் ஆழ்ந்துழல் நெஞ்சகப் பாவியேன்” எனவும் கூறுகின்றார். நெஞ்சம், நெஞ்சகம் என வந்தது; வஞ்சம், வஞ்சகம் என்பது போல. பேதையர் மயக்கில் உழல்வது பாவமாதல் தோன்றப் “பாவியேன்” என்கின்றார். அடுக்கி வரும் துன்பங்களால் சுட்டு வருத்துவது உலக வாழ்வின் இயல்பாதலால், அதனை “வெஞ்சகம்” என்றும் உலகில் வாழ்வோர் உயிரோடிருத்தல் வேண்டி உணவுக்கும் உடைக்கும் உறையுளுக்கும் நோய் மருந்துக்கும் அரிதின் முயன்று பெரிதும் உழைக்கும் செயல் வாழ்க்கைப் போர் எனப்படுதலால், அதனை, “வெஞ்சகப் போர்” என்றும், உடம்பொடு கூடி வாழ்தல் வேண்டுமென்னும் ஆசை இப்போர்க்குக் காரணமாதல் உணர்ந்து, அவ்வாசையைத் துறந்த ஞானவான்களைப் “போரினை விட்டுளோர்” என்றும், அவர்கட்குப் புகலளித்து உறுதி நல்கும் முருகப் பெருமான் எழுந்தருளும் பதியாதலால், “விட்டுளோர் புகழ் தஞ்சகத் தணிகை” என்றும் சிறப்பிக்கின்றார். தஞ்சகம் - தஞ்சமாகும் புகலிடம். தருமவான், செல்வவான் ஞானவான் என்றாற் போன்ற சொல்வழக்கு. தருமவான், ஈண்டு முருகன் மேனின்றது.
இதனால், மகளிர் மயக்கி லாழ்ந்து தருமவானாகிய முருகேசனை நினையாமைக்கு வருந்துவது புலப்படுத்தவாறாம். (1)
|