312.

    வானிகர் கூந்தலார் வன்க ணான்மிக
    மானிகழ் பேதையேன் மதித்தி லேனையோ
    தானிரும் புகழ்கொளும் தணிகை மேலருள்
    தேனிருந் தொழுகிய செங்க ரும்பையே.

உரை:

     பெரிய புகழ் படைத்த தணிகை மலைமேல் எழுந்தருளும் திருவருளாகிய தேன் நிறைந்தொழுகும் செங்கரும்பு போன்ற முருகப் பெருமானைக் கருமுகில் போன்ற கூந்தலையுடைய மகளிரின் வலிய கட்பார்வையினால் மிகவும் மையல் கொண்ட பேதையாகிய யான் நினையா தொழிந்தேன், எ. று,

     வேண்டும் வரங்களை நல்கும் முருகன் எழுந்தருளுதலால் அவன் உறையும் தணிகை மலை பெரும் புகழ் பெறுவதால், “இரும் புகழ் கொளும் தணிகை” என்று கூறுகின்றார். இரும்புகழ் - பெரிய புகழ். அன்புடன் வழிபடுபவர்க்குத் திருவருளைத் தங்குதடையின்றி வழங்குதலால், முருகனைத் தேன் சொரியும் செங்கரும் பென்று உருவகம் செய்கின்றார். அப்பெருமானை அன்புடன் சிந்தித்து வழிபடாமைக்குக் காரணம் பொய்ப் பெண்டிரின் மயக்கத்தில் கிடந்தமை என்பார், “வானிகர் கூந்தலார் வன்கணால் மிக மால் நிகழ் பேதையேன் மதித்திலேன்” என்றும், அதனை நினைந்து வருந்துமாறு தோன்ற, “ஐயோ” என்றும் உரைக்கின்றார். வான் - மழை மேகம். வன்கண் - விலக்கரிய வலிமையுடைய பார்வை. மால் - காம மயக்கம். மதித்தல் - சிந்தித்து வழிபடல்.

     இதனால், மகளிரின் கட்பார்வையால் மதி மயங்கி வழிபடாதொழிந்தமை கூறியவாறாம்.

     (2)