313.

    கருங்கடு நிகர்நெடுங் கண்ணி னார்மயல்
    ஒருங்குறு மனத்தினேன் உன்னிலேன் ஐயோ
    தரும்புகழ் மிகுந்திடுந் தணிகை மாமலை
    மருங்கமர்ந் தன்பருள் மன்னும் வாழ்வையே.

உரை:

     அருள் வழங்குவதால் புகழ் மிக்குறும் திருத்தணிகை மலையிடத்து எழுந்தருளித் தன்பால் அன்புடைய அடியவர் உள்ளத்தில நிலையாக நிற்கும் வாழ்முதலாகிய முருகப் பெருமானைக் கரிய விடம் போன்ற நீண்ட கண்களையுடைய மாயமகளிர் செய்யும் மையலனைத்தும் ஒருங்கு தங்கிய மனமுடையவ னாயினமையின், ஐயோ நினையாதொழிந்தேன், எ. று.

     தரும்புகழ் - அருள் தருவதால் உளதாகும் புகழ். மலைமருங்கு - மலை உச்சி. மருங்கு - பக்கம். உச்சியும் மலைக்கு ஒரு பக்கமாதலின், “மலை மருங்கு” என்கின்றார். மன்னுதல் - உறைதல்; மலையுச்சியிலும் அன்பர் உள்ளத்திலும் முருகன் எழுந்தருளுகின்றான் என்பது தோன்ற, “மாமலை மருங்கமர்ந்து அன்பர் உள் மன்னும்” என உரைக்கின்றார். வாழ்வளிக்கும் முதல்வனாதலால், “வாழ்வு” என்று கூறுகின்றார். உன்னுதல் - நினைத்தல்.

     இதனால், மகளிர் செய்யும் மயக்க வகை யனைத்தும் படிந்து கிடக்கும் மனமுடைமையால் நல்வாழ்வளிக்கும் முருகப் பெருமானை நினையா தொழிந்தமை உரைத்தவாறாம்.

     (3)