314. வைவளர் வாட்கணார் மயக்கில் வீழ்ந்தறாப்
பொய்வளர் நெஞ்சினேன் போற்றி லேன்ஐயோ
மெய்வளர் அன்பர்கள் மேவி ஏத்துறும்
செய்வளர் தணிகையில் செழிக்கும் தேனையே.
உரை: மெய்யுணர்வுடைய அன்பர்கள் வந்து வழிபடும் தணிகைப் பதியில் செழிப்புடன் விளங்கும் தேனாகிய முருகனைக் கூரிய வாள் போன்ற கண்களையுடை மகளிரது காம மயக்கத்தில் ஆழ்ந்து இடையறாது பொய்ம்மை மிகும் மனமுடையவனாதலால் ஐயோ, போற்றி வழிபடாமல் ஒழிந்தேன், எ. று.
செய்வளர் தணிகை - நன்செய் வயல்கள் பொருந்திய தணிகையம்பதி. செழித்தல் - மிக்குறுதல். தேன் போன்றவனைத் “தேன்” என்கின்றார். வைவளர்வாள் - கூர்மை பொருந்திய வாள். மகளிர் மயக்கத்தால் பொய் யொழுக்கம் உண்டாதல் பற்றிப் “பொய் வளர் நெஞ்சினேன்” என்று புகல்கின்றார்.
இதனாலும் மகளிர் மயக்கத்தால் தணிகை முருகனை வழிபடாமைக்கு வருந்தியவாறு காணலாம். (4)
|