315.

    செழிப்படும் மங்கையர் தீய மாயையில்
    பழிப்படும் நெஞ்சினேன் பரவி லேனையோ
    வழிப்படும் அன்பர்கள் வறுமை நீக்கியே
    பொழிற்படும் தணிகையில் பொதிந்த பொன்னையே.

உரை:

     உள்ளன்போடு வழிபடுகின்ற மெய்யன்பர்களின் வறுமையைப் போக்கிச் சோலைகள் சூழ்ந்த தணிகைப் பதியில் நிறைந்துள்ள பொன் போன்ற முருகப் பெருமானை இளமை வளம் சிறந்த மகளிரின் தீய மயக்கத்தால் குற்றப்படும் மனமுடையவனாதலால், ஐயோ, நாள்தோறும் வணங்கி வழிபடா தொழிந்தேன், எ. று.

     செழிப்படுதல் - செழுமையுறல்; ஈண்டுச் செழுமை, இளமை வளத்தின் மேற்று. மாயை - மயக்கம். தீமை புரிவதில் நெஞ்சைச் செலுத்துவதால், “தீயமாயை” என்று செப்புகின்றார். பழிப்படுதல் - குற்றம் செய்தல். மெய்ம்மை நெறியில் நின்று உண்மை யன்போடு வழிபடும் அன்பர்களை, “வழிபடும் அன்பர்கள்” என்று சிறப்பிக்கின்றார். அருள்வழி நின்று அன்பு செய்யும் தொண்டர்கள் எனினும் அமையும். வறுமை, அன்பர்களின் மெய்த் தொண்டுக்கு இடையூறு செய்தலின், அதனை இடமும் காலமும் அறிந்து வேண்டுவன நல்கிப் போக்கி யருள்வது பற்றி, வறுமை நீக்கி யருளுகின்றான். உலகியலில் வறுமையை நீக்குவது பொன்னாதலால் தணிகை முருகனை “வறுமை நீக்கிப் பொதிந்த பொன்” என்று புகழ்கின்றார். வறுமை எய்தும் போதெல்லாம் போக்குதற் பொருட்டுப் பொதிந்து வைத்த பொன் போல அடியார்க்கு வறுமை யெய்தும் போதெல்லாம் முருகன் அருள் புரிகின்றான் என்பது கருத்து.      இதனால் மங்கையர் செய்யும் தீய மாயையால் குற்றம் புரிந்து முருகனைப் போற்றா தொழிந்தமை எடுத்தோதியவாறு.

     (5)