316. பொதிதரும் மங்கையர் புளகக் கொங்கைமேல்
வதிதரும் நெஞ்சினேன் மதித்தி லேன்ஐயோ
மதிதரும் அன்பர்தம் மனத்தில் எண்ணிய
கதிதரும் தணிகைவாழ் கற்ப கத்தையே.
உரை: நன்ஞானம் பயக்கும் அன்பையுடைய அடியவர்கள் தங்கள் மனத்தில் எண்ணிய சிவகதியை அளிக்கும் தணிகையில் உள்ள கற்பகம் போன்ற முருகப் பெருமானை மங்கையரின் ஆடையால் மறைக்கப்படும் பருத்த கொங்கைகளையே நினைந்தொழுகும் மனமுடையேனாயினமையின், ஐயோ நினைப்பதில்லாதவனாயினேன், எ. று.
ஆடையால் மேனியை மறைத்து உலவுபவராதலால், “பொதி தரும் மங்கையர்” என்றும், இளமை வளத்தால் மதர்ந்த நிலைமை விளங்கப் “புளகக் கொங்கை” என்றும் அவற்றையே நினைந்தொழுகும் இயல்பு புலப்படக் “கொங்கை மேல் வதிதரும் நெஞ்சினேன்” என்றும் இயம்புகின்றார். மதித்தல் - உயர்வாக நினைத்தல்; மனத்தில் கொள்ளுதலுமாம். உண்மை யன்பே மேலான ஞானம் என்று சான்றோர் கூறுவர், “ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர் ஞான முண்டார்” எனச் சேக்கிழார் பெருமான் தெரிவிப்பது காண்க. இதனால் நன் ஞானமுடைய அன்பர்களை “மதி தரும் அன்பர்” என்று குறிக்கின்றார். அப்பெருமக்கள் வேண்டுவது சிவகதி அல்லது இன்மையின், கதி என்பது சிவகதியாயிற்று. வேண்டுவார் வேண்டுவதை வேண்டியவாறு நல்குவது தேவருலகத்துக் கற்பக மரம் என்பர். அதுபோல வேண்டுவார்க்கு வேண்டுவ தளிக்கும் முருகப் பெருமானைக் “கற்பகம்” என்று உரைக்கின்றார்.
இதனால், தணிகைப் பதிக் கண்ணுள்ள கற்பகமாகிய முருகன் பால் நெஞ்சினை வையாது மங்கையர் மேல் வைத்தொழிந்தேன் என இரங்கியவாறு. (6)
|