318.

    மெய்யாவோ நற்றணிகை மலையைச் சார்ந்து
        மேன்மையுறும் நின்புகழை விரும்பி ஏத்தேன்
    உய்யாவோ வன்னெறியேன் பயன்ப டாத
        ஒதியனையேன் எட்டிதனை ஒத்தேன் அன்பர்
    பொய்யாவோ டெனமடவார் போகம் வேட்டேன்
        புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன்
    அய்யாவோ நாணாமல் பாவி யேன்யான்
        யார்க்கெடுத்தென் குறைதன்னை யறைகு வேனே.

உரை:

     மெய்யனே, வளமிக்க தணிகை மலையில் எழுந்தருளி மேன்மை எய்துவிக்கும் நின்னுடைய திருப்புகழை அன்புடன் ஒதித்துதிக்க மாட்டேன்; உய்தி பெறுதற்காகாத தீய நெறியில் செல்பவனாகிய நான் எதற்கும் பயன்படாத ஒதி மரத்தையும், பழுத்தும் பயன்படாத எட்டி மரத்தையும் போன்றுள்ளேன்; நின்னுடைய அன்பர்கள் நிலையுதலின்றி உடைந்து கெடும் ஒடு போன்ற மகளிர் இன்பத்தை விரும்பி ஒழுகினேன்; புலைத்தன்மை யுடைய யான் சிறிதும் தூய்மை யில்லாதவன்; இவ்வகையால் ஞானமில்லாத பாவியாகிய யான், ஐயனே, என் குறைகளை இவ்வுலகில் யாவர்க்கும் எடுத்துரைப்பேன், எ.று.

     மெய்ம்மையே உருவாக அமைந்தவனாதலின், “மெய்யாவோ” என்று விளம்புகிறார். ஓகாரம், அசை, மெய்யன், மெய்யா என விளி யேற்றது. தணிகைக்கு நன்மை, வளமுடைமை, தன்னைச் சார்ந்தாரையும், தன் புகழை அன்புடன் ஓதுவாரையும் மேன்மை பெறச் செய்யும் பெருமானாதலின், “சார்ந்து மேன்மையுறும் நின் புகழ்” என்று பரவுகின்றார். “சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும் வண்ணம் நேர்ந்தவன்” (வல்லம்) என்று ஞானசம்பந்தர் கூறுவர். உறுவிக்கும் என்பது உறும் என வந்தது. நன்னெறி போலாது உயிர்க்குத் தீது விளைவிக்கும் நெறியை, “உய்யா வன்னெறி” என்கின்றார். தீநெறி மேற்கொண்டாரை எளிதில் நீங்க விடாமை பற்றி “வல்நெறி” எனப்படுகிறது. உள்வலி இல்லாத மரமாகலின், “பயன்படாத ஒதி” எனவும், பழுத்தும் பயன்படாமை பற்றிப் “பயன்படாத எட்டி” எனவும் விதந்துரைக்கின்றார். திண்மை யில்லாத அறிவுடையேன் என்றற்கு “ஒதி அனையேன்” எனவும், உடம்பொடு கூடி யிருந்தும் பயன்படல் இல்லாமை தோன்ற, “எட்டிதனை ஒத்தேன்” எனவும் உரைக்கின்றார். விரைந்து உடைவது பற்றிப் “பொய்யான ஓடு” எனப்பட்டது. பொய்யான என்பது ஈறு குறைந்தது. “என” என்றவிடத்து உரைக்கும் என்ற சொல் வருவிக்கப்பட்டது. உடைந்து கெடும் ஓடு போல் மகளிர் போகம் சிறிது போதில் கெட்டொழிதலால், “ஓடென உரைக்கும் போகம்” என்கின்றார். புலையன் - புலைத்தன்மையுடைய கீழ்மகன். தீ நாற்ற முடையதாயினும் புலாலை உண்ணும் புலையன் போலச் சிறுமையுடைத்தாயினும் மகளிர் போகத்தைப் பெரிதென விரும்பி நுகர்வதால், “புலையனேன்” என்று இயம்புகின்றார். வேட்டல் - விரும்புதல். புனிதம் - தூய்மை. இச்செயல்களை நினைக்கினும் நெஞ்சம் நாணுமாகையால், “நாணாமல்” என்றும், நாணமின்றிப் பிறர்க்கு நாவால் உரைப்பினும் இகழ்ந்து கேளா தொழுகுவாராதலால், “நாணாமல் பாவியேன் யான் யார்க் கெடுத்து என் குறை தன்னை அறைகுவேன்” என்றும் வருந்துகிறார்.

     இதனால், முருகன் புகழை விரும்பி ஏத்தாமை, உய்யா வன்னெறி மேற்கொண்டமை முதலிய குறைகளை எடுத்துரைத்தவாறாம்.

     (2)