2. கந்தர் சரணப் பத்து

சென்னைக்கந்த கோட்டம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

32.

    அருளா ரமுதே சரணம் சரணம்
        அழகா வமலா சரணம் சரணம்
    பொருளா வெனையாள் புனிதா சரணம்
        பொன்னே மணியே சரணம் சரணம்
    மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
        மயில் வாகனனே சரணம் சரணம்
    கருணா லயனே சரணம் சரணம்
        கந்தா சரணம் சரணம் சரணம்.

உரை:

     அருள் நிறைந்த அமுதமே, அழகனே, மலமில்லாத தூயனே, என்னையும் பொருளாக மதித்து ஆள்கின்ற புனிதனே, பொன்னும் மணியும் போல்பவனே, மருட்சி யுடையார் நினைத்தற் கரியவனே, மயிலை வாகனமாக வுடையவனே, கருணைக்குச் சிறந்த இடமானவனே, கந்தனே, உன் திருவடியே எனக்குக் கதியாகும். எ. று.

     சாவா மருந்தாகிய தேவரமுதின் வேறுபடுத்தற்கு “அருளார் அமுதே” என்று கூறுகிறார். இனி இதற்கு அருளாளர்க்கு அமுதமாய் இருப்பவனே என உரைத்தலும் பொருந்தும். கட்டிளமையும் பேரழகும் உடையனாய் முருகன் என்ற பெயர் கொண்டு விளங்குவது பற்றி, “அழகா” என்றும், இயல்பாகவே மலபந்த மில்லாதவனாதலால் “அமலா” என்றும் இசைக்கின்றார். முருகனது பெருமையை நோக்கத் தான் ஒரு பொருளாகக் கருதப்படற் காகாமை எண்ணியும், தன்னை ஆண்டருளும் அப்பெருமானுடைய தகைமை நினைந்தும், “பொருளா ஏனையாள்புனிதா” என்று புகல்கின்றார். புனிதன் - தூய வுடம்பினன். பொன்னின் பொற்பும் மணியின் நிறமும் ஒளியும் உடையனாதல் கருதிப் “பொன்னே மணியே” என்று இசைக்கின்றார். பொருளல்லவற்றைப் பொருளாக எண்ணுவது மருளாதலின், அம்மருட்சி யுடையார்க்கு அருளொளி காணப்படாமை பற்றி “மருள்வார்க்கு அரியாய்” என வழுத்துகிறார். முருகனுக்கு மயில் ஊர்தியாதலால், “மயில் வாகனனே” எனவும், கருணை நிறைந்து அதற்கே யிடமாதல் தோன்றக் “கருணாலயனே” எனவும் கூறுகின்றார். தனித்தனி ஆறு குழவியாய்த் தோன்றி உமையம்மையால் ஆறுமுகமும் ஓருடம்பும் உடைய உருவினனானமை பற்றிக் ‘கந்தா’ எனச் சிறப்பிக்கப் படுவதால் “கந்தா” என்று குறிக்கின்றார். திருவடியே புகலும் கதியுமா யடைபவர் செய்யும் முறையீட்டைச் சரணம் என்னும் மரபு பற்றி “சரணம் சரணம்” என வுரைக்கின்றார். சரணம்-திருவடி.

     இதனால் கந்தசாமிக் கடவுளின் திருவடியே உயிர்கட்குப் புகலிடம் என்பது வற்புறுத்தப்படுகிறது.

     (32)