320.

    பொல்லாத மங்கையர்தம் மயற்குள் ளாகும்
        புலையமனத் தால்வாடிப் புலம்பு கின்றேன்
    கல்லாத பாவியென்று கைவிட் டாயோ
        கருணையுரு வாகியசெங் கரும்பே மேரு
    வில்லான்றன் செல்வமே தணிகை மேவும்
        மெய்ஞ்ஞான வொளியேஇவ் வினையேன் துன்பம்
    எல்லாம்நீ அறிவாயே அறிந்தும் வாரா
        திருந்தால்என் குறையைஎவர்க் கியம்பு கேனே.

உரை:

     அருளே உருவாக விளங்குகின்ற செங்கரும்பு போல்பவனே, மேரு மலையை வில்லாகக் கொண்ட சிவனுடைய செல்வ மகனே, தணிகை மலையில் எழுந்தருளும் மெய்ஞ்ஞான ஒளியே, பொல்லாத மகளிரின் ஆசை மயக்கத்துக்குள் வீழ்ந்து வருந்தும் புலைத்தன்மை யுடைய மனத்தால் வாடிப் புலம்புகிறேன்; கல்வி கல்லாத பாவியென்று என்னைக் கைவிட்டு விட்டாயோ? அறிந்திருந்தும் என் முன் வாராதிருப்பாயானால் என் குறையை எடுத்து யான் எவர்க்குச் சொல்லி முறையிடுவேன், எ. று.

     துன்பம் விளைவிக்கும் மங்கையர் என்றற்குப் 'பொல்லாத மங்கையர்' எனவும், அவர்கள் செய்யும் மயக்கத்துக்கு ஆளாவோர் மனம் கீழ்மைப் பண்புடையதாம் என்பார், “புலைய மனம்” என்றும், அதனால் விளைவது துயரமாதலின், “வாடிப் புலம்புகின்றேன்” எனவும் கூறுகின்றார். கல்லாதவருள்ளம் அஞ்ஞான இருள் சூழ்ந்து கிடப்பது பற்றி, இறைவன் திருவருள் ஒளி அதனுட் புகுவதில்லை யாதலால், “கல்லாத பாவி என்று கைவிட்டாயோ” என்று வினவுகின்றார். “கல்லா நெஞ்சில் நில்லா ஈசன்” (இருக்குக்குறள்) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. கல்லாத பாவி என்பதனால் கல்லாமை பாவம் எனக் கருதப்படுவது காண்க. கருணையே உருவாகிய உனக்கு என்னைக் கைவிடல் பொருந்தாது என்ற குறிப்புப் புலப்படக் “கருணை யுருவாகிய செங்கரும்பே” என்றும் பரவுகின்றார். சிவஞானத்தின் சகளத் திருவுரு எனப்படுதலால், “தணிகை மேவும் மெய்ஞ்ஞான ஒளியே” என்று கூறுகின்றார். உயிர் தோறும் உயிர்க்குயிராய் நின்று அவற்றின் நினைவு செயல்களை உணரும் பெருமானாதலால் “வினையேன் துன்பம் எல்லாம் நீ அறிவாயே” எனவும், அறிந்து வைத்தும் அருட் காட்சி வழங்காதிருப்பது என்னை வருத்துகின்றது என்பார், “அறிந்தும் வாரா திருந்தால் என் குறையை எவர்க் கியம்புகேனே” என்றும் விளம்புகின்றார்.

     இதனால், தமது மனத்தின் புலைத் தன்மையால் துயருற்றுப் புலம்புகின்றமை கூறியவாறாம்.

     (4)