321.

    முன்னறியேன் பின்னறியேன் மாதர் பால்என்
        மூடமனம் இழுத்தோடப் பின்சென் றெய்த்தேன்
    புன்னெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன்
        புனிதஅருட் கடலாடேன் புளகம் மூடேன்
    பொன்னரையான் தொழும்சடிலப் புனிதன் ஈன்ற
        புண்ணியமே தணிகைவளர் போத வாழ்வே
    என்னரையே என்னமுதே நின்பால் அன்றி
        எவர்க்கெடுத்தென் குறைதன்னை இயம்பு கேனே.

உரை:

     பொன்னுலகத்து வேந்தனாகிய இந்திரன் தொழுது வணங்கும் சடையையுடைய தூயனாகிய சிவபிரான் பெற்ற புண்ணியப் பொருளே, தணிகை மலையில் எழுந்தருளும் ஞான வாழ்வே, எனக்கரசே, எனக்கமுதம் போல்பவனே, நான் முன்பின் அறியாதவன், மூடத் தன்மையை யுடைய என் மனம் இழுத்த இழுப்பில் அதன் பின்னே ஓடி இளைத்து விட்டேன், புன்னெறியில் சென்று பொய்யரோடு பழகி உன்னுடைய தூய அருட்கடலில் மூழ்கி யாடுதலும், ஆனந்தத்தால் மெய் புளகம் போர்த்தலும், இல்லாதொழிந்தேன்; என்னுடைய இக்குறைகளை நின்னிடத் தன்றி வேறு எவரிடத்து எடுத்துரைப்பேன்? எ. று.

     பொன் அரையான் - பொன்னுலக வேந்தனாகிய இந்திரன்; பொன்மலைக்கு அரசனாகிய பருவதராசன் எனினும் அமையும். சடிலம் - சடை. புனிதன் - தூயவன். எல்லா உயிர்ப் பொருள் உயிரில் பொருள் ஆகியவற்றில் ஒன்றாயும் உடனாயும் தோய்ந்து நிற்பினும் அவற்றின் தன்மை சிறிதும் கலக்கப் பெறாத செம்பெருமானதலால், “புனிதன்” என்று புகழ்கின்றார். உருவில்லாத புண்ணியம் உருக்கொண்டது போல விளங்குவதால் முருகனைப் “புண்ணியமே” என்றும் சிவஞான முடைய செல்வர்களுக்குச் சிவானந்தப் பெருவாழ்வு அளிக்கும் பெருமானாதல் தோன்றப் “போத வாழ்வே” என்றும் போற்றுகின்றார். தனக்குக் காப்பாய் இருப்பது பற்றி, “என் அரைசே” எனவும், சிந்திக்கும் போது சிந்தையின்கண் தேனூறுவதால், “என் அமுதே” எனவும், பரவி மகிழ்கின்றார். மலப்பிணிப்பால் அறிவு சுருங்கினமையின் முன்னே நிகழ விருப்பது அறியாமல் மறைக்கப்படுவதும், நிகழ்ந்தது நினைவில் இல்லாமல் மறக்கப்படுவதும், உடைமையால், “முன் அறியேன் பின் அறியேன்” என்று மொழிகின்றார். மகளிரால் தூண்டப்படும் காம வேட்கையால் இருளுற்ற மனம் மூடமாகிப் பல்வேறு வகையில் ஈர்த்தலால் அறிவு அறைபோகி மனத்தின் பின்னோடி அயர்வுறுதலின், “மாதர்பால் மூடமனம் இழுத்தோடப் பின் சென்று எய்த்தேன்” என்று விளம்புகிறார். எய்த்தல் - இளைத்தல். சிறுமை விளைவிக்கும் நெறியை மேற்கொண்டிருப்பது தோன்றப் “புன்னெறியேன்” எனவும், அதனால் உண்மை காணமாட்டாது பொய்ம்மையாளரைக் கூடி உலவுகின்றேன் என்பார், “பொய்யரொடும் பயின்றேன்” எனவும், இச்செயல்களால் திருவருள் ஞானம் பெற்று இன்புறேனாயினேன் என்பாராய், “நின்றன் புனித அருட் கடலாடேன் புளகம் மூடேன்” எனவும் புகழ்கின்றார். அளப்பரும் பெருமை யுடையதாகலின் திருவருள், “அருட் கடல்” எனச் சிறப்பிக்கப் படுகிறது. புளகம் - மகிழ்ச்சியால் உடலில் தோன்றும் பூரிப்பு.

     இதனால், திருவருள் இன்பக் கடலில் மூழ்கித் திளைத்து இன்புறாமைக்கு ஏதுக் கூறியவாறாம்.

     (5)