322. விடுமாட்டில் திரிந்துமட மாத ரார்தம்
வெய்யநீர்க் குழிவீழ்ந்து மீளா நெஞ்சத்
தடுமாற்றத் தொடும்புலைய உடலை யோம்பிச்
சார்ந்தவர்க்கோ ரணுவளவும் தானீ யாது
படுகாட்டில் பலனுதவாப் பனைபோல் நின்றேன்
பாவியேன் உடற்சுமையைப் பலரும் கூடி
இடுகாட்டில் வைக்குங்கால் என்செய் வேனோ
என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
உரை: பெருமானே, கட்டவிழ்த்து விட்ட மாடு போலக் கண்ட இடமெல்லாம் திரிந்து இளமகளிரின் இன்ப வுறுப்பாகிய வெவ்விய சிறுநீர்க் குழியில் வீழ்ந்து பெறும் சிற்றின்பத்தில் மூழ்கி மீளாது தடுமாறி அலையும் நெஞ்சத்தோடு புலைத் தன்மையையுடைய உடம்புக்கு உணவளித்துப் பாதுகாத்துப் பற்றாய் அடைந்தவர்களுக்கோர் அணுவளவேனும் ஈந்து மகிழாது பசையற்ற படுகாட்டில் பயனின்றி நிற்கும் பனைமரம் போன்று பாவியாய் உள்ள எனது உயிரற்ற உடலாகிய சுமையைப் பலர் கூடி எடுத்து சென்று இடுகாட்டில் புதைக்கும் போது நான் யாது செய்வேன்? எனக்குள்ள குறைகளை நின்னைத் தவிர வேறு எவர்க்கு எடுத்துரைப்பேன்? எ. று.
விடுமாடு - கட்டுத் தறியிலிருந்து அவிழ்த்து விட்ட மாடு. விடுமாடு கண்ட விடமெல்லாம் சென்று திரிந்து மேய்வது போல அடக்கி ஒடுக்கி நெறிப் படுத்துவாரின்றிக் காம மகளிர் உறையும் இடங்களுக்குச் சென்று திரிந்தேன் என்பார், “விடுமாட்டில் திரிந்து மட மாதரார் தம் வெய்ய நீர்க் குழி வீழ்ந்து” என்றும், அவர் தரும் சிற்றின்பத்தில் தோய்ந்து மீளாவாறு சிக்குண்டு தடுமாறலானேன் என்பது விளங்க, “மீளா நெஞ்சத் தடுமாற்றத் தொடு உழன்றேன்” என்று உரைக்கின்றார். புலால் நாறும் ஊன் தசைகளாலாகிய உடம்பாதலின், “புலைய வுடல்” எனப் புகல்கின்றார். தான் தன் உடம்பைப் பேணுவது போலப் பிறரும் தம்முடலை ஓம்புதற்குத் தம்மை அடைகின்றமை அறிந்து அவர்கட்கு ஒன்று ஈவது கடமையாக, அதனை யான் செய்யவில்லை என்பார், “உடலை யோம்பிச் சார்ந்தவர்க்கு ஓர் அணுவளவும் ஈயாது நின்றேன்” என்று இயம்புகின்றார். படுகாடு - பசும்புல் இன்றிக் காய்ந்துலர்ந்து கல்லும் மண்ணுமே படர்ந்துள்ள புன்செய்க் காடு. அங்கு நிற்கும் பனைமரம் சார்ந்தவர்க்கு நிழற் பயன் தராது நிற்பது போல் யானும் பயன்படாமல் நிற்கின்றேன் என்ற கருத்துப்படப் “படுகாட்டில் பலனுதவாப்பனை போல் நின்றேன்” என்று உரைக்கின்றார். இவ்வாறு மகளிர் இச்சைக்கும் பிறர்க்கும் பயன்படாது தன்னலமே ஓம்புதற்கும் அடிமையாய்க் கீழ்மையுற்ற நான் இறக்கும் போது ஒன்றும் செய்ய மாட்டாதவனாவேன் என்பார், “பாவியேன் உடற்சுமையைப் பலரும் கூடி இடுகாட்டில் வைக்குங்கால் என் செய்வேனோ” எனத் தம்மையே வெறுத்துரைக்கின்றார். இத்தகைய என் குறைகளைச் செவி கொடுத்துக் கேட்பார் உன்னைத் தவிர உலகில் யாரும் இல்லையெனக் கட்டுரைக்கலுற்று, “என் குறையை எவர்க் கெடுத்திங் கியம்புகேனே” என்று மொழிகின்றார்.
இதனால், காம வேட்கைக்கும் தன்னலம் பேணுகைக்கும் ஆளாய்க் கெட்டொழிந்த குற்றத்தை நினைந்து உரைத்தவாறாம். (6)
|