323. மின்னநே ரிடைமடவார் மயல்செய் கின்ற
வெங்குழியில் வீழ்ந்தழுந்தி வெறுத்தேன் போலப்
பின்னையே யெழுந்தெழுந்து மீட்டும் மீட்டும்
பேய்போல வீழ்ந்தாடி மயற்குள் மூழ்கிப்
பொன்னையே யொத்தவுன தருளை வேண்டிப்
போற்றாது வீணேநாள் போக்கு கின்ற
என்னையே யான்சிரிப்பே னாகி லந்தோ
என்குறையை யெவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
உரை: மின்னற் கொடி போன்ற இடையை யுடைய இளமகளிரின் மயக்கம் விளைவிக்கின்ற பெண்மை யுறுப்பாகிய வெவ்விய குழியில் பன்முறை வீழ்ந்து வெறுப் பெய்தியவன் போலப் பின்னர் எழுந்து நீங்கி மீள மீளப் பேய் கொண்டது போல அக்குழிக்குள் வீழ்ந்து ஆழ்ந்து அறிவு மயங்கிப் பொன் போன்ற உனது திருவருளை வேண்டி வழிபாடு செய்யாமல் வாழ்நாளை வீணாக்குதலை நினைந்து என்னையே நோக்கிச் சிரிப்பே னெனில், ஐயோ, என் குறைகளை இவ்வுலகில் எவர்க்கு எடுத்துரைப்பேன், எ.று.
மின் - வானத்துக் கருமேகக் கூட்டத்திடையே நுண்ணிய கொடியுருவில் தோன்றும் ஒளி; நுண்மை பற்றி இளமகளிர் இடைக்கு மின்னற் கொடியை உவமம் கூறுவது மரபு. மடவார் - இளமகளிர். தமது வெங்குழியில் ஆடவர் வீழ்தல் வேண்டிக் கண்ணிலும் முகத்திலும் மார்பிலும் உளதாகும் அழகொளியால் காணும் ஆடவர் கருத்தை மயக்குமாறு விளங்க, “மடவார் மயல் செய்கின்ற வெங்குழி” என்றும், இன்ப நுகர்ச்சி முடிந்த பின் நீங்குதலின், அந்நீக்கத்துக்குப் பொருளுரைப்பாராய், “வெறுத்தேன் போலப் பின்னையே எழுந்தெழுந்து” என்றும், அந் நுகர்ச்சி மேற் சென்ற வேட்கை அறாது பின்னும் உய்த்தலால், “மீட்டும் மீட்டும் பேய் போல வீழ்ந்தாடி” என்றும், வீழ்ந்தெழினும், காம மயக்கம் அறிவை மறைப்பதினின்றும் நீங்காமை பற்றி, “மயற்குள் மூழ்கி” என்றும் விளங்க வுரைக்கின்றார். பெறற் கருமை தோன்றத் திருவருளைப் “பொன்னையே ஒத்த வுனதருள்” எனச் சிறப்பித்து, அதனைப் பெறுதற்குச் செயற் பாலது உள்ள மொன்றிய வழிபாடாக அதனைச் செய்யாது வீண் பொழுது போக்கின குற்றம் புலனாதலால், “அருளை வேண்டிப் போற்றாது வீணே நாள் போக்குகின்ற என்னை” எனவும், அதனையறியும் போது உள்ளம் “என்னையே எள்ளி இகழ்கிறது” என்பார், “என்னையே யான் சிரிப்பேனாகில்” எனவும் கூறுகின்றார்.
இதனால், மகளிர் கூட்டத்தில் ஓரொருகால் வெறுப்புத் தோன்றினும் மயக்க மிகுதியால் மீள மீளத் தோய்ந்து திருவருளை நாடிப் போற்றாதொழிந்தமை எடுத்தோதியவாறாம். (7)
|