326.

    வஞ்சமட மாதரார் போகம் என்னும்
        மலத்தினிடைக் கிருமியென வாளா வீழ்ந்தேன்
    கஞ்சமலர் மனையானும் மாலும் தேடக்
        காணாத செங்கனியில் கனிந்த தேனே
    தஞ்சமென்போர்க் கருள்புரியும் வள்ள லேநல்
        தணிகையரை சேயுனது தாளைப் போற்றேன்
    எஞ்சலிலா வினைச்சேம விடமாய் உற்றேன்
        என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.

உரை:

     தாமரை மலரை இடமாக வுடைய பிரமனும் திருமாலும் தேடிக் காண முடியாத சிவபெருமானாகிய செங்கனியில் தோன்றிய தேன் போன்ற முருகனே, தஞ்சம் என முறையிடுவோர்க்கு அருள் செய்யும் வள்ளலே, நல்ல தணிகை மலையில் எழுந்தருளும் அருளரசே, மனத்தின்கண் வஞ்ச நினைவுகளை யுடைய மகளிரது காம நுகர்ச்சி என்னும் மலத்தின்கண் நெளிகின்ற புழுப் போல வெறிதே வீழ்ந்து கிடந்தேனாதலால் உனது திருவடியைப் போற்றி வணங்கா தொழிந்தேன்; அதன் மேலும் குறைத லில்லாத வினைகட்குத் தக்க இடமாய் அமைந்தேன்; இவ்வாறு உண்டாகிய என் குறைகளை இவ்வுலகில் நின்னைத் தவிர வேறு எவர்க்கு எடுத்துரைப்பேன்? எ. று.

     பிரமன், தாமரைப் பூவில் இருப்பவனாதலால் அவனைக் “கஞ்சமலர் மனையான்” என்கின்றார். திருமாலும் பிரமனும் சிவனுடைய திருவடியும் திருமுடியும் காண மாட்டா தொழிந்த வரலாறு நாடறிந்த செய்தியாதலின் இருவரும் “தேடக்காணாத செங்கனி” என்று சிவனைப் புகழ்கின்றார். “போதின் மேல் அயன், திருமால் போற்ற உம்மைக் காணாது நாதனே இவன் என்று நயந்தேத்த மகிழ்ந்தளித்தீர்” (நல்லூர்) என்று ஞானசம்பந்தர் கூறுவது காண்க. பழுத்துச் சிவந்த கனியிடத் தூறும் தேன் போலச் செம்மேனி யம்மானாகிய சிவனிடத்துத் தோன்றிச் சிந்திப்பவர்க்குச் செந்தேன் சுரந்தளித்து இன்புறுத்துவது பற்றி முருகனைச் “செங்கனியில் கனிந்த தேனே” என்று பரவுகின்றார். எளியேமாகிய எமக்கு அருள் புரிக என வேண்டுவோரைத் “தஞ்சம் என்போர்” என்றும், அவர்கள் வேண்டியவாறு வேண்டியது அருளுவது கொண்டு, “அருள் புரியும் வள்ளலே” என்றும் துதிக்கின்றார். சொல்லும், நினைவும், செயலும் ஒவ்வாமல் ஒழுகும் பொருட் பெண்டிரை, “வஞ்சமட மாதர்” என்றும், அவர் தரும் கலவி யின்பத்திலேயே வீழ்ந்து மயங்கிக் கிடந்தமை தோன்றப் “போகம் என்னும் மலத்தினிடைக் கிருமி என வாளா வீழ்ந்தேன்” என்றும், அதனால் நல்லறி விழைந்தமையால் உன் திருவடியை வாழ்த்தி வணங்குவ தில்லேனாயினேன் என்றும் உரைக்கின்றார். மனத்தால் நினைப்பதும், வாயாற் பேசுவதும், மெய்யால் செய்வன செய்தலும் வினைகளாதலால் அவற்றை இடையறாது செய்து கொண்டிருப்பது பற்றி, “எஞ்சலிலா வினைச்சேம இடமாய் உற்றேன்” என்று எடுத்துரைக்கின்றார். சேம இடம் - பாதுகாப்பான இடம்.

     இதனால், மகளிர் மயக்கத்தால் அறிவிழந்து திருவடியை வணங்குவது மறந்து வினைகட் கிடமாகிய குறைகளை எடுத்தோதியவாறாம்.

     (10)