26. முறையிட்ட பத்து
வறுமையாலும் மறதியாலும் தாம் செய்த
குற்றங்களையும் உற்ற குறைகளையும் காரண காரிய முறையில்
எடுத்துரைத்துத் தமக்கு அருள் ஞானம் தாராமை முறையாகாது
எனப் பாட்டுத் தோறும் முறையிடுவதால் இப்பத்து
முறையிட்ட பத்து எனப்படுகின்றது. இதன்கண் முருகப்
பெருமானைப் பொருளென்றுணராது ஒழிந்தமையும், திருவடிப்
புகழ் மறந்தமையும், கல் மனமுடையவர், வீணர், உலோபிகள்,
ஈனர், கொடியவர் முதலியவரிடங்களுக்குச சென்று துணை பெறாது
வருந்தினமையும் பிறவும் விளக்கப்படுகின்றன.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம்
327. பொன்னைப் பொருளா நினைப்போர்பால்
போந்து மிடியால் இரந்தலுத்தேன்
நின்னைப் பொருளென் றுணராத
நீசன் இனியோர் நிலைகாணேன்
மின்னைப் பொருவும் சடைப்பவள
வெற்பில் விளைந்த வியன்கரும்பே
முன்னைப் பொருளே தணிகையனே
முறையோ முறையோ முறையேயோ.
உரை: மின்னலைப் போன்ற சடையை யுடைய சிவனாகிய பவள மலையில் விளைந்த பெரிய கரும்பு போன்றவனே, முன்னைப் பழம்பொருளே, தணிகை மலையை யுடைய பெருமானே, எனக்கு உறுதிப் பொருளாக விளங்குபவன் நீயே என்று உணராத கீழ் மகனாகையால் வறுமையால் பொன்னையே உறுதிப் பொருளாக நினைத்துப் பிறர்க்கு ஈயாமல் பேணும் செல்வர்களிடம் சென்று பன்முறையும் இரந்து நெஞ்சம் தளர்ந்தே னாதலால் எனக்கு வேறு நன்னிலை காணேனாயினேன்; இதுமுறை யாகுமோ? ஆகாதன்றோ? எ.று.
சிவன் திருமுடியிலுள்ள சடை மின்னற் கொடி போல் விளங்குவது என்று பெரியோர் கூறுவதால், “மின்னைப் பொருவும் சடை” எனவும், திருமேனி பவளம் போல்வது எனவும் கூறுவதால், “மின்னைப் பொருவும் சடைப் பவள வெற்பு” என்றும் பகர்கின்றார். “பொலிந் திலங்கும் மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை” (பொன் - 1) என்றும், “பவள வண்ணப் பரிசார் திருமேனி” (புன்கூர்) என்றும், “பவளத்தின் முழுச் சோதி” (அதிசய) என்றும் சான்றோர் உரைக்கின்றனர். இன்ப வடிவினனாகிய சிவன்பால் தோன்றினமையின், “பவள வெற்பில் விளைந்த வியன் கரும்பே” என்று முருகப் பெருமானைச் சிறப்பிக்கின்றார். முன்னைப் பரம்பொருளாகிய சிவஞான மூர்த்தியாதலால், “முன்னைப் பொருளே” என மொழிகின்றார். தணிகையன் - தணிகை மலையை யுடையவன். மெய்ப் பொருளை நெறி யறிந்து உணர்தற்குரிய மக்களினத்தில் பிறந்தேனாயினும், அம்மெய்ப்பொருள் நீ என்பதுணராமையால் கீழ் மகனாயினேன் என்பார், “நின்னைப் பொருள் என்றுணராத நீசன்” என்றும், அதனால் வறுமை யுற்றுச் செல்வர்களை அடைந்து இரக்கலுற்று அவர்களால் பன்முறையும் மறுக்கப்பட்டு மனவலி இழந்து மெலிந்தேன் எனக் கூறுவாராய்ச் “செல்வர்பால் போந்து மிடியால் இரந்தலுத்தேன்” என்றும் தெரிவிக்கின்றார். மறுத்த செல்வர்கள் ஒன்றும் ஈயாமைக்குக் காரணம் இது என்பார், “பொன்னைப் பொருளா நினைப்போர்” என்று கூறுகின்றார். மிடி - வறுமை. அலுத்தல் - சோர்தல். மிடியாலும் செல்வர்களை இரந்து மனம் சோர்ந்தமையாலும் இவ்வுலகில் நிற்க இடம் பெறாது அலைகின்றேன் என முறையிடுவாராய், “இனியோர் நிலை காணேன்” எனவும், “முறையோ முறையோ” எனவும் மொழிகின்றார்.
இதனால் முருகப் பெருமானே பொருளாயவன் என்றுணராமையால் மிடியுற்றுச் செல்வர்பால் இரந்து மனம் அழிந்தமை முறையிட்டவாறாம். (1)
|