329. அன்பின் உனது திருவடிக்கே
ஆளாய்த் தொண்டொன் றாற்றாதே
துன்பின் உடையோர் பால்அணுகிச்
சோர்ந்தேன் இனியோர் துணைகாணேன்
என்பின் மலிந்த மாலைபுனை
எம்மான் தந்த பெம்மானே
முன்பின் நடுவாய் முளைத்தோனே
முறையோ முறையோ முறையேயோ.
உரை: எலும்பு கொண்டு தொடுக்கப்பட்ட மாலையை அணிந்து கொள்ளும் எம்மானாகிய சிவன் பெற்ற பெருமானே, முன்னும் பின்னும் நடுவுமெனக் கூறும் வகையில் தோன்றிய முருகப் பெருமானே, அன்பினால் உனது திருவடிக்கு ஆட்பட்டு ஒரு தொண்டும் செய்யாமல் துன்பமே அடைதற்குரிய குற்ற முடையவர்களோடு சேர்ந்தொழுகித் துன்பத்தால் சோர்வுற்றேனாதலால் இப்பொழுது துணையாவார் நின்னையன்றி வேறு எவரையும் கண்டிலேன்; யான் காணாமை முறையாயினும் என் குறை பொறுத்து நீ அருளாமை முறையாகாது, எ. று.
சிவன் என்பு மாலையுடையவன் என்பதைச் “செத்தார் தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்” (நாகை) என்று நம்பியாரூரர் கூறுவது காண்க. மான் - தலைவன். பெருமான் என்பது பெம்மான் என வந்தது. முன்னவன் என்றும் பின்னவனென்றும் நடுநின்றவனென்றும் போற்றப்படுவது பற்றி, “முன்பின் நடுவாய் முளைத்தோன்” என்று மொழிகின்றார். இடங்கால் எல்லைகளுக்கு அப்பால் உள்ள பரசிவத்தில் தோன்றியது பற்றி இவ்வாறு கூறுகின்றாரெனினும் அமையும். உண்மை அன்பாலன்றி முருகப் பெருமானுக்கு ஆளாதல் கூடாமையால், “அன்பின் உனது திருவடிக் காளாய்” எனவும், ஆளாயவர் முருகப் பெருமானுக்கும் அவன் தங்கியருளும் உயிரினங்கட்கும் தொண்டு செய்வது அறமாகக் கொண்டவராதலின் அதனைச் செய்யாக் குற்றத்தைத் “தொண்டொன்று ஆற்றாதே” எனவும், ஏனையோர் துன்பத்துக் குரியவராதலின் அவர்களைத் “துன்பின் உடையோர்” எனவும், அவரைச் சேர்வது துன்பத்துக்கே காரணமாகையால் அவர்களை “அணுகிச் சோர்ந்தேன்” எனவும் உரைக்கின்றார். சோர்தல் - மனவுணர்வு தளர்தல். தளர்வோரைத் தாங்கும் அருளாளர் நின்னைத் தவிரப் பிறர் எவருமில்லை என்பாராய், “இனியோர் துணை காணேன்” எனவும் உரைக்கின்றார். இந்நிலையில் எனக்கு நீ அருளாதொழிதல் முறையாகாது என்பார், “முறையோ முறையோ” என்று பரவுகின்றார்.
இதனால் முருகற்கு ஆட்பட்டுத் தொண்டொன்றும் செய்யாத குற்ற முடைமை ஓதியவாறாம். (3)
|