330.

    அருகா மலத்தின் அலைந்திரக்கம்
        அறியா வஞ்ச நெஞ்சகர்பால்
    உருகா வருந்தி உழன்றலைந்தேன்
        உன்தாள் அன்றித் துணைகாணேன்
    பெருகா தரவில் சிவன்பெறும்நற்
        பேறே தணிகைப் பெருவாழ்வே
    முருகா முகம்மூ விரண்டுடையாய்
        முறையோ முறையோ முறையேயோ.

உரை:

     பெருகிய அன்பினால் சிவபெருமான் பெற்ற நற்புதல்வனே, தணிகைப் பதியில் எழுந்தருளும் பெரிய வாழ்முதலே, முருகனே, முகம் ஆறு உடையவனே, குறையாத மலவிருளால் களைப்புண்டு இரக்கமில்லாத வஞ்சம் பொருந்திய நெஞ்சினை உடையவர்களோடு கூடி நோயால் உருகி மனம் வருந்தித் துன்புற்று அலைந்தேனாதலால், இப்பொழுதே உன்னுடைய திருவடி யல்லது வேறு துணை காணப் பெறேனாயினேன்; எனக்கு நீ அருள் புரியாமை முறையாகாது, எ. று

     அளவிறந்த துன்பத்துக் காளாய் வருந்திய தேவர்கள்பால் உளதாகிய பேரன்பினால் சிவபிரான் உவகையுடன் பெற்ற புதல்வனாதலால், “பெருகாதரவில் சிவன் பெறும் நற்பேறே” என்று புகழ்கின்றார். ஞான வடிவாகப் பெற்ற புதல்வனாதலால், “நற்பேறு” எனச் சிறப்பிக்கின்றார். தன்னை வழிபடும் அன்பர்க்குப் பெருவாழ்வு அளிப்பவனாதல் பற்றிப் “பெருவாழ்வு” என்கின்றார். ஈசானம் தற்புருடம், வாமம,் சத்தியோ சாதம், அகோரம் என்ற ஐந்து முகத்தில் தோன்றிய முகமைந்தும் அதோமுகம் ஒன்றுமாக ஆறுமுகமுடையவ னாதலின், “முகம் மூவிரண்டுடையாய்” என்று மொழிகின்றார். முருகன் - அழகன்; என்றும் மாறாத இளமை யுடையவன் எனினும் அமையும். உயிர்களை அனாதியே பிணித்து இருள் செய்து அறிவைச் சுருக்கும் மலம், திருவருள் ஞானத்தாலன்றி இயல்பு கெடுவதில்லை யாதலால், “அருகா மலம்” என்றும், இருள் மலத்தால் அறியாமை யுற்றுக் குற்றம் புரிந்து வருந்துவது விளங்க, “மலத்தின் அலைந்து” என்றும், அதனால் வஞ்சரோடு கூடி வருந்தினேன் என்பார், “உழன்றலைந்தேன்” என்பாராய் “மலத்தின் அலைந்து வஞ்ச நெஞ்சகர்பால் கூடி உழன்றலைந்தேன்” என்றும் தெரிவிக்கின்றார். இரக்க மில்லாத இயல்பை மனத்தின்கண் மறைந்தொழுகுதலால், “இரக்கம் அறியா வஞ்ச நெஞ்சகர்” எனவும், அவர்களுடன் கூடுதலால் தானும் இரக்கமின்றிக் குற்றம் புரிந்து, நோயுற்று, உருகி, மெலிந்து, வருந்தி உழன்றலைந்தமை புலப்பட, “உருகா வருந்தி உழன்றலைந்தேன்” எனவும் விளக்குகின்றார். வஞ்சகர் கூட்டுறவு வேறு துணை காணாமைக்குக் காரணம் என்றாராயிற்று.

     இதனால், மலவிருளும், வஞ்ச நெஞ்சர் கூட்டமும் துன்புற்றலைதற்குக் காரணம் எனத் தெரிவித்தவாறாம்.

     (4)