331. பொன்னின் றொளிரும் மார்பன்அயன்
போற்றும் உன்தாள் புகழ்மறந்தே
கன்னின் றணங்கும் மனத்தார்பால்
கனிந்தேன் இனியோர் துணைகாணேன்
மின்னின் றிலங்கு சடைக்கனியுள்
விளைந்த நறவே மெய்யடியார்
முன்னின் றருளும் தணிகையனே
முறையோ முறையோ முறையேயோ.
உரை: மின்னற் கொடி போல் விளங்குகின்ற சடையை யுடைய சிவனாகிய கனியின் உள்ளத்தில் விளைந்த முருகனாகிய தேனே, மெய்யன்புடைய அடியார்களின் முன்னின்று அருள்புரியும் தணிகைப் பெருமானே, திருமகள் இருந்து விளங்கும் மார்பை யுடைய திருமாலும் பிரமனும் வணங்கித் துதிக்கும் உன் திருவடிப் புகழை மனதிற் கொள்ளாமல் கல்லின் தன்மை கொண்டு வருத்த முறுவிக்கும் மனமுடைய பொல்லாதவர்களுடன் கூடி முதிர்ந்தே னாதலால் இப்பொழுதே நீ யல்லது வேறு துணையாவார் ஒருவருமில்லை எனக் கண்டேன்; எனக்கருளாதொழிவது முறையாகாது, எ. று.
சிவனுடைய முடிக்கண் விளங்கும் சடை மின்னலின் நிறமும் ஒளியும் உடையதாகலின், “மின்னின் றிலங்கு சடை” என்கின்றார். பழுத்த கனியுள் தேன் போல் இனிய சாறு வெளிப்படுதலால், “கனியுள் விளைந்த நறவு” எனச் சிவனைக் கனியாகவும், முருகனை நறவாகவும் உரைக்கின்றார். நறவு சாறு. மெய்யன்புடைய அடியவர் மனத்தில் எழுந்தருளியும், வேண்டும் போது முன்னே தோன்றியும் அருள் புரிவது முருகப் பெருமானது இயல்பாதலால், “மெய்யடியார் முன்னின் றருளும் தணிகையனே” என்று மொழிகின்றார். பொன் - திருமகள். முருகனுடைய திருவடிப் புகழைக் கற்றும் கேட்டும் நெஞ்சிற் கொள்ளாத குற்றத்தை, “உன் தாள் புகழ் மறந்து” என்றும், இரக்க மில்லாத பண்பினால் பிறர்க்கே யன்றித் தமக்கும் துன்பம் வருவித்துக் கொள்பவர் என்றற்குக் “கன்னின் றணங்கும் மனத்தார்” என்றும், அவருடன் கூடி அறிவிழந்தேன் என்பாராய், “மனத்தார்பால் கனிந்தேன்” என்றும், அதனால் இப்பொழுதே நீ யல்லது துணையில்லை என்று கண்டேன் என்பார், “இனியோர் துணை காணேன்” என்றும் இயம்புகின்றார்.
இதனால் கல்மனமுடைய கீழ் மக்களோடு கூடிப் பயின்று முருகன் திருவடித் துணையைக் காணா தொழிந்தமையை முறையிட்டவாறாம். (5)
|