332. வெதிருள் ளவரின் மொழிகேளா
வீண ரிடம்போய் மிகமெலிந்தே
அதிரும் கழற்சே வடிமறந்தேன்
அந்தோ இனியோர் துணைகாணேன்
எதிரும் குயின்மேல் தவழ்தணிகை
இறையே முக்கண் இயற்கனியின்
முதிரும் சுவையே முதற்பொருளே
முறையோ முறையோ முறையேயோ.
உரை: வானத்தில் எதிர் நோக்கிப் பரவும் மேகங்கள் மேலே தவழ்கின்ற தணிகை மலை இறைவனே, மூன்று கண்களை யுடைய சிவனாகிய அழகிய கனியிடத்தில் முதிர்ந்த ஞானச் சுவையானவனே, முழுமுதற்பொருளே, செவிட்டுத் தன்மை யுள்ளவர் போல நல்லோர் உரைக்கும் சொற்களைக் கேளாமல் ஈனரைச் சார்ந்து அவர் உரைக்கும் பொய்யுரைகளைக் கேட்டு அறிவு சுருங்கி ஒலிக்கின்ற கழல் அணிந்த உன்னுடைய திருவடியை மறந்து கெட்டே னாதலால் ஐயோ இப்பொழுதுதான் உன்னை யல்லது வேறு துணையில்லை என்பது கண்டேன்; என்னை அருளாமை முறை யாகாது, எ. று.
குயின் - மேகம். வானளாவ நிற்கும் தணிகை மலைமேல் எதிர் வீசும் காற்றுச் சுமந்து வரும் மேகங்கள் தவழ்வதுபற்றி, “எதிரும் குயின் மேல் தவழ் தணிகை” என்று சிறப்பிக்கின்றார். முக்கண்களை யுடைய சிவனை அழகிய கனி என்றலின் முதிர்ந்த சிவஞானமே உருவாக அமைந்த முருகப் பெருமானைச் சிவக்கனியின் “முதிரும் சுவையே” என்று மொழிகின்றார். முதற்பொருள் - பரம்பொருள். முருகனது திருவருள் நலத்தை நல்லோர்கள் உரைப்பவும் கேளா தொழிந்தமை தோன்ற, “வெதிருள்ளவரின் மொழிகேளா” என்றும், ஒழுக்கமில்லாத ஈனர்கள் உரைத்தவற்றை விரும்பிக் கேட்டு நாளை வீண் போக்கி அறிவு சுருங்கினமை விளம்புவாராய், “வீணரிடம் போய் மிக மெலிந்து” என்றும், அதனால் நினது திருவடியை மறந்து கெட்டேன் என்றும் உரைக்கின்றார். வெதிருள்ளவர் - செவிட்டுத் தன்மையுள்ளவர்; செவிடர் என்பதாம். செவியிருந்தும் கேளாத் தன்மையுடைமையால் செவிடர் என்னாது வெதிருள்ளவர் என்கின்றார். நல்லோர் செவியுறக் கேட்குமாறு சொல்லியும் கேளாமை பற்றிச் செவிடர் போல என்பதால் இன்னுருபு ஒப்புப் பொருட்டு. கேளாது என்னும் வினையெச்சம் ஈறு கெட்டது. வீணர் - பயனில்லன கூறுவதும் செய்வதும் உடையவர். அவர் உரைகளைக் கேட்பதால் உணர்வு நாளும் தேய்ந்து சுருங்குவதுபற்றி, “மிக மெலிந்து சேவடி மறந்தேன்” என்று சொல்லுகின்றார். வீரரணியும் கழல் உள்ளே பரல் உடையதாகையால், “அதிரும் கழல்” என்கின்றார். பண்டை நாளில் தமிழ் வேந்தர் பகை மன்னரின் முடிப்பொன்கொண்டு இக்கழல்களைச்செய்து அணிந்து கொண்டனர் எனச் சங்க நூல்கள் கூறுகின்றன. வீணர் கூட்டத்தில் சேர்ந்து முருகன் திருவடியை மறந்து பன்னாள் கிடந்தமைக்கு இப்பொழுது வருந்துகின்றாராதலால், “அந்தோ” என இரங்குகின்றார்.
இதனால் வீணர் கூட்டத்தில் கிடந்து முருகன் சேவடியை மறந்த குற்றத்தை முறையிட்டவாறாம். (6)
|