333. ஈனத் திவறும் மனக்கொடியோர்
இடம்போய் மெலிந்து நாள்தோறும்
ஞானத் திருத்தாள் துணைசிறிதும்
நாடேன் இனியோர் துணைகாணேன்
தானத் தறுகண் மலையுரியின்
சட்டை புனைந்தோன் தரும்பேறே
மோனத் தவர்தம் அகவிளக்கே
முறையோ முறையோ முறையேயோ.
உரை: மதமும் தறுகண்மையு முடைய யானையின் தோலை உரித்துச் சட்டை போல போர்த்துக் கொண்ட சிவபெருமான் பெற்ற பேறாகிய மகனே, மோன விரதமுடைய பெரியோர்களின் உள்ளத்தில் விளங்கும் ஞான விளக்கமே, கீழ்மைப் பண்பும் உலோப மனமுமுடைய கொடியவர்களிடம் நாள்தோறும் சென்றிரந்து, உள்ளம் சோர்ந்து, உடல் மெலிந்து உன்னுடைய ஞான மயமான இரண்டு திருவடிகளையும் எண்ணாதொழிந்தமையால் இப்பொழுது நீ யல்லது வேறு துணை இல்லை என்று காண்கின்றேன்; இக் குறை கண்டு எனக்கு அருள் புரியா திருப்பது முறையாகாது, எ. று.
ஈனம் - கீழ்மைப் பண்பு. இவறுதல் - உலோபத் தன்மை. உலோபிகள் உள்ளத்தில் பொருளாசையும் ஈகைக்குரிய இயல்பு இல்லாமையும் பொருந்தி யிருப்பதால், “ஈனத் திவறும் மனக் கொடியோர்” என்றும் அவரிடம் சென்று இரப்போர் உள்ள மிழந்து, உடல் உரமிழந்து வருந்துவராதலின், “மெலிந்து” என்றும் கூறுகின்றார். ஞான மூர்த்தியாதலால் முருகன் திருவடியை, “ஞானத் திருத்தாள்” என்று புகழ்கின்றார். நாடுதல்- நினைத்தல். தானம் - மதம். தறுகண் - பெரு வலிமை. தானமலை என்பதனால் யானை என்பதாயிற்று. ஈண்டு அது சிவபெருமான் கொன்று தோலை உரித்த கயாசுரன் மேற்று. புலங்களை அவித்தொழுகும் முனிவர்கள், ஞானவான்கள் மோனத்தவர் என்றும், மோனிகள் என்றும் கூறப்படுவர். “ஞானிகளாய் உள்ளார்கள் நான்மறைய முழுதுணர்ந்து ஐம்புலன்கள் செற்று மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து தவம் புரியும் முதுகுன்றம்” என்று ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. இப்பெருமக்கள் உள்ளத்திலே எழுந்தருளி ஞானவொளி செய்வது பற்றி, “மோனத்தவர்தம் அகவிளக்கே” என்று மொழிகின்றார்.
இதனால் உலோபிகளிடம் பன்னாளும் சென்று இரந்து அறிவு மெலிந்து முருகனை நினையா தொழிந்த குற்றத்தை எடுத்தோதியவாறு. (7)
|