335. வேதா னந்த னொடுபோற்றி
மேவப் படும்நின் பதம்மறந்தே
ஈதா னம்தந் திடுவீர்என்
றீன ரிடம்போய் இரந்தலைந்தேன்
போதா னந்தப் பரசிவத்தில்
போந்த பொருளே பூரணமே
மூதா னந்த வாரிதியே
முறையோ முறையோ முறையேயோ.
உரை: ஞானானந்தமாகிய பரசிவத்தில் தோன்றிய முருகப் பெருமானே, நிறைவின் உருவே, முதிர்ந்த இன்பக் கடலே, பிரமனும் திருமாலும் வழிபட்டு அடையப் பெறும் நின் திருவடியை மறந்து தானம் ஈக, தருக எனக் கீழ்மக்களிடம் போய் இரந்து வருந்தினேன்; நினது திருவருளை விரும்பும் எனக்கு இது முறையாகுமா? ஆகாதன்றோ? எ. று.
ஞான ஆனந்த வடிவம் அகளமான பரசிவமாதலால் அதனைப் “போதானந்த பரசிவம்” எனவும், அது சிவமூர்த்தமாய்ச் சகளீகரித்து நெற்றி விழியாற் பெற்ற பரம்பொருளாதலின் முருகனைப் “பரசிவத்தில் போந்த பொருளே” எனவும் உரைக்கின்றார். அகளமாய், ஞானானந்தமாய் நின்ற பரசிவம் சகளமாய் நின்று பெற்ற பொருளாகிய முருகப் பெருமான் திருமேனி ஞானானந்தத்தில் குறைவுடைய தன்று என்றற்குப் “பூரணமே” என்றும், அதன்கண் கடல் போல் ஞானவின்பம் பெருகியுள்ளது என்றற்கு, “மூதானந்த வாரிதி” எனவும் விளக்குகின்றார். வேதா - பிரமன். நந்தன் - நந்தைக் கையிலே உடையவன். நந்து - சங்கு. நின்னுடைய திருவடியை நினைந்து போற்றி வேண்டுவனவற்றை இரந்து பெறுவதை விடுத்துக் கீழ் மக்களிடம் போய்ப் பன்முறையும் இரந்து வருந்தினேன் என்பாராய், “நின்பதம் மறந்து ஈனரிடம் போய் இரந்து அலைந்தேன்” என்றும் கூறுகின்றார். ஈனர்களில் உயர்ந்தோரும் ஒப்பவரும் இருத்தலால் அவரவர் தகுதி நோக்கித் தானம் ஈக என்றும், தந்திடுவீர் என்றும் இரந்தமை தோன்ற, “ஈ தானம் தந்திடுவீர்” எனவும் இயம்புகின்றார். ஈனர்களில் உணர்வும் ஒப்பும் உடையவரைத் தேர்ந்து கொண்ட என் அறிவு பிரமனும் திருமாலும் வழிபட்டு வேண்டுவன பெறுதற்கமைந்த நின் திருவடிப் பெருமையை நினையா தொழிந்த குற்றத்தைப் பொறுத்து எனக்கு அருள் புரியாதிருப்பது முறையாகாது என்றற்கு, “முறையோ முறையோ முறையேயோ” எனவும் உரைக்கின்றார்.
இதனால் திருவடியின் பெருமையை மறந்து ஈனர்களை இரந்து வருந்திய குற்றத்தை எடுத்துரைத்தவாறாம். (9)
|