336. வடியாக் கருணை வாரிதியாம்
வள்ளல் உன்தாள் மலர்மறந்தே
கொடியா ரிடம்போய்க் குறையிரந்தேன்
கொடியேன் இனியோர் துணைகாணேன்
அடியார்க் கெளிய முக்கணுடை
யம்மான் அளித்த அருமருந்தே
முடியா முதண்மைப் பெரும்பொருளே
முறையோ முறையோ முறையேயோ.
உரை: அடியார்க் கெளியவனும் கண்கள் மூன்றுடையவனுமான சிவபெருமான் அளித்த அருமருந்தாகிய பெருமானே, முடிவில்லாத எல்லாப் பொருட்கும் முதன்மையான பெருமையை யுடைய பொருளாயவனே, குறையாத அருட் கடலாம் வள்ளலாகிய உன் திருவடித் தாமரையை நினையாமல் கொடுமைத் தன்மையை யுடைய கீழ்மக்களிடம் போய் என் குறைகளைச் சொல்லித் தாழ்மையுடன் இரந்து வருந்தினேன்; இவ்வகையில் கொடியனாகிய யான் இப்பொழுது உன்னைத் தவிர வேறு துணை காணேனாயினேன்; என் குறையைக் கேளா திருப்பது முறையாகாது, எ. று.
சிவபெருமானை திருநாவுக்கரசர் முதலிய பெரியோர்கள் அடியவர்க்கெளியவர் என்றும் எடுத்துரைப்பதால், வடலூர் வள்ளலாரும், “அடியார்க் கெளிய முக்கணுடை யம்மான்” என்று பாராட்டுகின்றார். “எளியவர் அடியர்க் கென்றும் இன்னம்பர் ஈசனாரே” என்று நாவுக்கரசர் பாடுவது காண்க. சிவனுக்கு மகனாய்த் தன் திருவடி வணங்குவோருடைய பிறவி நோய்க்கு மருந்தாய் விளங்குவதால், “அம்மான் அளித்த அருமருந்தே” எனவும், உலகியற் பொருள்களில் முதன்மையானவை எனக்காணப் படுவன முடிவுற்றுக் கெடுவ துண்மையின் பரம்பொருட்கு உள்ள முதன்மை எக்காலத்தும் கெடுவதில்லாமை பற்றி, “முடியா முதன்மைப் பொருளே” என்றும், அதுவே அதற்குப் பெருமையாதலால், “முதன்மைப் பெரும்பொருளே” என்றும் மொழிகின்றார். முருகன் பரம்பொருள் என்பது சான்றோர் கொள்கையாதலால் ஈண்டு “முதன்மைப் பெரும் பொருளே” என்று மொழிகின்றார். “முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த முத்தனே முடிவிலா முதலே” (கோயில்) என்று மணிவாசகப் பெருமான் உரைப்பது காண்க. வடிதல் - குறைதல். கருணை வாரிதி - கருணைக் கடல். வணங்கும் அன்பர்கள் வேண்டுவ தறிந்து வேண்டியவாறு வழங்கும் வள்ளல் நீ என்பதை யெண்ணி, உன் திருவடித் தாமரையை நினையாது மறந்தேன் என்பாராய் “வள்ளல் உன்தாள் மலர் மறந்தேன்” என்றும், அக்குற்றத்தோடு நில்லாது கொடியவருடைய கொடுமை நோக்காமல் அவர்பாற் சென்று, என் குறைகளைச் சொல்லி யிரந்து நின்றேன் என்பாராய்க் “கொடியாரிடம் போய்க் குறை யிரந்தேன்” என்றும், அச்செயலால் தான் நெறி பிறழ்ந்தமை புலப்படத் தன்னைக் கொடிய குற்றம் செய்தவன் என்றற்குக் “கொடியேன்” என்றும், இவ்வாற்றால் இப்பொழுது எனக்குத் துணையாவார் ஒருவரையும் காண்கிலேன் என்று வருந்துவாராய், “இனியோர் துணை காணேன்” என்றும் உரைக்கின்றார். திருவடியை மறந்தமைக்கும் கொடியாரைக் குறையிரந்து நெறி வழுவியதற்கும் ஏது நின் அருளொளி பெறாமையாதலால் என்னை அருளாமை முறை யாகாது என்பார், “முறையோ முறையோ” என்று மொழிகின்றார்.
இதனால் முருகப் பெருமாள் திருவடியை மறந்து கொடியவர்களிடம் குறை இரந்து குற்றப்ட்டதைத் தெரிவித்தவாறாம். (10)
|