27. நெஞ்சவலம் கூறல்
நெஞ்சவலம் என்பது நெஞ்சினது பல்வகைத்
தீய வியல்புகளால் எய்தும் வருத்த மிகுதி. இழுதைத் தன்மை,
வஞ்ச முடைமை, மையலுறுதல், துட்டத்தனம், காய்த லுடைமை
முதலாகவுள்ள பல்வேறு அவலத் தன்மைகளால் எய்திய அழுக்கு
நினைவு செயல்களைப் பாட்டுத் தோறும் இப்பத்தின்கண்
விரித்தோதி வருந்துகிறார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம்
337. இழுதை நெஞ்சினேன் என்செய்வான் பிறந்தேன்
ஏழை மார்முலைக் கேவிழைந் துழன்றேன்
பழுதை பாம்பென மயங்கினன் கொடியேன்
பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
அழுது கண்கள்நீர் ஆர்ந்திடும் அடியர்
அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே
தொழுது மால்புகழ் தணிகையென் னரசே
தோன்ற லேபரஞ் சுடர்தரும் ஒளியே.
உரை: அன்பினால் கண்களில் நீர் ஒழுக அழுது பரவும் அடியவர் மனத்தின் கண் சுரக்கின்ற ஆனந்த அமுதமே, திருமால் தொழுது புகழும் தணிகைப் பதியில் எழுந்தருளுகின்ற எனது அருளரசே, தலைவனே, பரஞ்சுடராகிய சிவபெருமான் தந்தருளும் ஞான வொளியாகிய முருகப் பெருமானே, குழையும் நெஞ்சை யுடைய எளியனாகிய நான் யாது செய்வதற்காக இவ்வுலகில் பிறந்தேனோ? மகளிருடைய கொங்கையிற் கிடந்து பெறும் சிற்றின்பத்தையே விரும்பி வருந்துவதும், பழுதையைப் பாம்பெனக் கொண்டு மயங்குவதும் செய்பவனாய்க் கொடியவனும் பாவியு மாயினே னாதலால், எவ்வகைத் தன்மையைக் கொண்டு உன்னுடைய திருவருளை எய்தப் பெறுவேன், எ. று.
மெய்யன்பினால் வழிபடும் அடியவர் நினையும் போதெல்லாம் மனமுருகிக் கண்ணீர் பெருகி அழுதல் இயல்பாதலால், “அழுது கண்கள் நீர் ஆர்ந்திடும் அடியர்” எனவும், அவர் சிந்தைக்கண் தேனூற நிற்பது இறைவனுடைய இயல்பாதல் தோன்ற, “அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே” எனவும் உரைக்கின்றார். சாதலை நீக்குகின்ற அமரருண்ணும் அமுது போலின்றிப் பிறவாப் பேரின்பம் நல்கும் அமுதெனச் சிறப்பித்தற்கு, “ஆனந்த அமுதே” என்று கூறுகின்றார். திருமால் இராமாவதாரத்தில் தணிகை போந்து முருகனை வழிபட்டுச் சிவஞானம் பெற்றான் எனத் தணிகைப் புராணம் கூறுதலால், “தொழுது மால்புகழ் தணிகை” என்றும், அங்கு வீற்றிருந்து முருகப் பெருமான் அருளாட்சி புரிவதுபற்றி, “என் அரசே” என்றும் போற்றுகின்றார். தோன்றல் - தலைவன். பரஞ்சுடர் - மேலான சோதியாய்ச் சுடருமாகிய சிவபெருமான், அவரிடத்துத் தோன்றிய ஞானப் பேரொளிப் பொருள் முருகன் என்றற்குப் “பரஞ்சுடர் தரும் ஒளியே” எனவும் உரைக்கின்றார். சிவபெருமானைச் “சோதியாய்ச் சுடருமானார்” (நெய்த்தா) என்று திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. இழுது - வெண்ணெய்த் திரள். எளிய பொருட்கெல்லாம் விரைந்து குழைந்து உருகும் இயல்புடைய மனமுடையவன் என்பது தோன்ற, “இழுதை நெஞ்சினேன்” என உரைக்கின்றார். திண்மையுற்றுச் செய்தற் கரியவற்றைச் செய்தற் கமைந்த நெஞ்சம் இழிபொருளை விழைந்து உருகுவது பண்பன்றென்பது இதனால் தோன்ற நின்றது. “தாழ்வீழ்வார் பிறர்க்கு ஊண்று கோலாகார்” என்பது போல இழுதை நெஞ்சு கொண்டு ஞானவண்மை மிக்க நின் திருவருளைப் பெறுவது கைகூடாதபடியால், “என் செய்வான் பிறந்தேன்” என்று சொல்லி வருந்துகிறார். இத்தன்மையுடைய நெஞ்சின் வழி நின்று சிற்றின்பத்தில் வீழ்ந்து கெடுவேனாயினேன் என்பாராய், “ஏழைமார் முலைக்கே விழைந்து உழன்றேன்” என்கின்றார். ஏழைமார் - மகளிர். பரந்த உலகியல் அறிவில்லாமையால் மகளிரை ஏழை என்பது வழக்கு. பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் மருளுடையவன் என்றற்குப் “பழுதை பாம்பென மயங்கினன்” என்றும், மருட்சியுடையோர் நேரிய நெறியில் செல்லாது பாவ நெறியிலே செல்வராதலால் தம்மைக் “கொடியேன் பாவியேன்” என்றும் இழித்துரைக்கின்றார். கொடுமைப் பண்பும், பாவச் செய்கையும் உடையே னாதலின் உன் திருவருளை அடையும் நன்னெறி ஒன்றும் அறியேனாதலின், “எந்தப் பரிசு கொண்டு அடைவேன்” என்று அவலிக்கின்றார். பழுதை - வைக்கோலால் திரிக்கப்படும் கயிறு. இருட் போதில் மருண்டவன் கண்ணுக்குப் பழுதை பாம்பு போலத் தோன்றுமாதலின் திரிபுணர்ச்சிக்கு இதனை உதாரணமாக்க் காட்டுவது மரபு.
இதனால், மயக்க வுணர்வும், கொடுமைப் பண்பும், பாவச் செய்கையும் கொண்டு திருவருள் ஞானம் பெறற்குத் துணையாகாத நெஞ்சின் செயல் நினைந்து வருந்தியவாறாம். (1)
|