338. வஞ்ச நெஞ்சினேன் வல்விலங் கனையேன்
மங்கை மார்முலை மலைதனில் உருள்வேன்
பஞ்ச பாதகம் ஓருரு எடுத்தேன்
பாவியேன் எந்தப் பரிசுகொண் டடைவேன்
கஞ்சன் மால்புகழ் கருணையங் கடலே
கண்கள் மூன்றுடைக் கரும்பொளிர் முத்தே
அஞ்சல் அஞ்சலென் றன்பரைக் காக்கும்
அண்ண லேதணி காசலத் தரசே.
உரை: பிரமனும் திருமாலும் புகழ்கின்ற கருணையாகிய அழகிய கடலே, மூன்றாகிய கண்களையுடைய சிவபெருமானாகிய கரும்பினிடத்தே தோன்றி விளங்குகின்ற முத்துப் போன்ற முருகப் பெருமானே, அஞ்சற்க என்று தன்பால் அன்புடைய அடியவர்களைக் காத்தருளும் தலைவனே, தணிகை மலையில் எழுந்தருளும் அருளரசே, வஞ்சம் நிறைந்த நெஞ்சினை யுடைய யான் வலிமிக்க விலங்கு போன்றவன்; மகளிர் கொங்கைகளாகிய மலைகளில் வீழ்ந்துருளுபவன்; பாதகங்கள் ஐந்துமோர் உருக்கொண்டாற் போல்பவன்; அதனால் பாவியாகிய நான் எந்த வகையில் உன் திருவருளைப் பெறுவேன்? எ. று.
கஞ்சன் - தாமரையில் இருக்கை கொள்ளும் பிரமன்; கஞ்சம் - தாமரை. கரும்பிடத்தே முத்துப் பிறக்கும் என்னும் மரபு பற்றிக் “கண்கள் மூன்றுடைக் கரும்பொளிர் முத்தே” என்றும், தன்பால் அன்பு கொண்டு பிறவித் துன்பத்துக்கு அஞ்சும் அடியார்கட்கு அச்சமகற்றி அருளுபவன் முருகன் என்பது பற்றி, “அஞ்ச லஞ்சலென்று அன்பரைக் காக்கும் அண்ணலே” என்றும் உரைக்கின்றார். சொல்லும், நினைவும், செயலும் ஒவ்வா தொழுகும் மனமுடையவன் என்றற்குத் தம்மை, “வஞ்ச நெஞ்சினேன்” என்றும், நல்லறி வின்றிப் பிறர்க்குத் தீங்கு செய்யும் கொடிய செயலுடையேன் என்றற்கு, “வல்விலங் கனையேன்” என்றும், வள்ளலார் தம்மையே பழித்துரைக்கின்றார். காம விச்சையால் மகளிர் கூட்டத்திலேயே கிடப்பவன் என்பதற்கு, “மங்கை மார்முலை மலைதனில் உருள்வேன்” எனவும், பாதகம் ஐந்தும் செய்தொழுகும் பாவி என்றற்குப் “பஞ்ச பாதகம் ஓருரு வெடுத்தேன் பாவியேன்” எனவும், இவ்வகையால் உன் திருவருளை அடைவதற்கு ஒரு தகுதியும் இல்லே னாயினேன் என்பாராய், “எந்தப் பரிசு கொண்டு அடைவேன்” எனவும் சொல்லி வருந்துகிறார். கொங்கைகட்கு மலையை உவமம் செய்வது கவி மரபாதலால், மகளிருடன் கூடி உழல்வதை, “முலை மலைதனில் உருள்வேன்” என்று குறிக்கின்றார். பஞ்ச பாதகம் - ஐந்து பெருங் குற்றங்கள்; அவை பொய், கொலை, புலை, கள், காமம் என்பன. புலையை விலக்கிக் களவைச் சேர்த்து ஐந்தென்பதும், காமத்தை விலக்கிக் குருநிந்தையைச் சேர்த்து ஐந்தென்பதும் உண்டு. இவ்வைந்தினையும் செய்தொழுகுவேன் என்பார், “பஞ்ச பாதகம் ஓருரு எடுத்தேன்” என்று பகர்கின்றார். இத்தீய பண்பும், தீய செயலும் கொண்டு உன்னை யடைய முடியாதாகையால், என் செய்வேன் என இரங்குவாராய், “எந்தப் பரிசு கொண்டு அடைவேன்” என்று இசைக்கின்றார்.
இதனால் வஞ்ச நெஞ்சமும் வல்விலங்கின் செய்கையும் உடைமையால் முருகனை அடையும் பரிசொன்றும் இல்லாமை சொல்லி இரங்கியவாறாம். (2)
|