341. துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன்
துயர்செய் மாதர்கள் சூழலுள் தினமும்
பட்ட வஞ்சனேன் என்செய உதித்தேன்
பாவியேன் எந்தப் பரிசுகொண் டடைவேன்
நட்ட மாடிய நாயகன் அளித்த
நல்ல மாணிக்க நாயக மணியே
மட்ட றாப்பொழில் சூழ்திருத் தணிகை
வள்ள லேமயில் வாகனத் தேவே.
உரை: திருவம்பலத்தில் கூத்தாடிய தலைவனாகிய சிவபெருமான் அளித்தருளிய தூய மாணிக்க மணிகளில் தலையாய மணி போல்பவனே, தேன் குறையாத சோலைகள் சூழ்ந்த திருத்தணிகையில் எழுந்தருளும் வள்ளலே, மயிலை வாகனமாக வுடைய தேவர் பெருமானே, தீய நினைவுடைய யான் எட்டி மரம் போல்பவனாய் நோய் தந்து துயரம் உறுவிக்கும் மகளிர் கூட்டத்தில் நாளும் தோய்ந்துழன்ற வஞ்சகனாவேன்; இத்தன்மையை யுடைய பாவியாகிய யான் ஏன் பிறந்தேனோ? எந்த நல்லியல்பு கொண்டு உன் அருள் நிலவும் திருமுன் வந்தடைவேன்? எ.று.
நட்டம் - நடனம்; இது கூத்து எனவும் வழங்கும். “சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே” (பல்லாண்டு) என்று சேந்தனார் ஓதுவது காண்க. முருகக் கடவுட்கு மாணிக்க மணிபோலும் நிறமும் ஒளியுமுடைய திருமேனியாதலால், “மாணிக்க மணியே” என்று பரவுகின்றார். உலகியல் மாணிக்கங்களுள் குற்றமிருத்தலால் அவற்றின் நீக்குதற்கு, “நல்ல மாணிக்கம்” என்றும், குற்றமில்லாத மாணிக்க மணிகளுள் தலையாய மணி போல்பவனாதல் பற்றி, “நாயக மணியே” என்றும் நவில்கின்றார். நாயகன் அளித்த மணி, நாயக மணியாத லன்றிப் பிறிதாகா தென்னும் நயம் தோன்ற, “நாயகன் அளித்த நாயக மணியே” என்பது நிற்கின்றது. மட்டு - தேன். தேன் துளிக்கும் பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்தது திருத்தணிகை. முருகப் பெருமானுக்கு மயில் சிறப்புடைய வாகனமாதலால், “மயில் வாகனத் தேவே” எனப் பரவுகின்றார். தீய நினைவுகட்கு இடமாதலால், “துட்ட நெஞ்சினேன்” எனவும், பூத்துக் காய்த்தும் பயன்படாத எட்டி மரம் போலக் கல்வியும் அறிவும் பெற்றும் திருவருள் ஞானப் பேற்றுக்குரியனாகா தொழிந்தமையால், “எட்டியை அனையேன்” எனவும் தம்மையே இகழ்ந்துரைக்கின்றார். பொருளிழப்பும் நோயும் எய்துவிப்பது பற்றிப் பொருட் பெண்டிரைத் “துயர் செய் மாதர்” எனத் தூற்றுகின்றார். அவரது குணஞ்செயல்களை யறிந்திருந்தும், அவர்களின் கூட்டத்தை வரும்பி அவர்கள் வாழும் தெருக்களில் திரிந்துழன்றமை புலப்படத் “துயர்செய் மாதர்கள் சூழலுள் தினமும் பட்ட வஞ்சனேன்” என்று கூறி வருந்துகிறார். இன்னோரன்ன பாவங்களைச் செய்தற்கென மக்கட் பிறப்பு உண்டாவதில்லையாதலால், “என்செய வுதித்தேன் பாவியேன்” என்று பரிபவப் பட்டு, எத்தகைய செயற் பண்பைக் கொண்டு உன் திருவருளைப் பெறக் கடவேன் என்பாராய், “எந்தப் பரிசு கொண்டு அடைவேன்” என இரங்குகின்றார்.
இதனால், துட்ட நினைவும் பயனில் வாழ்வும் பொய்ப் பெண்டிர் புணர்ப்பும் திருவருட் பேற்றுக் காகாமை யெண்ணி வருந்தியவாறாம். (5)
|